Close

Election-Collector Inspection – Nilakottai

Publish Date : 30/03/2021
.

செ.வெ.எண்:-43/2021

நாள்:-30.03.2021

திண்டுக்கல் மாவட்டம்

நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி, காவல் துறையினர் தபால் வாக்கு பதிவு செய்யும் மையம், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான கொரோனா தடுப்பு உபகரணங்கள் ஆகியவற்றை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிலுக்குவார்பட்டியில் பதட்டமான வாக்குச்சாவடி மையம் மற்றும் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம்(Ballot paper) பொருத்தும் பணி மற்றும் நிலக்கோட்டை HNUPR மேல்நிலைப்பள்ளியில் காவல் துறையினர் தபால் வாக்கு பதிவு செய்யும் மையம் ஆகியவற்றை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(30.03.2021) பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2021 வருகின்ற 06.04.2021 அன்று நடைபெறவுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 25,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 2673 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அதில் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 342 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்குப்பதிவு செய்ய தேவையான அனைத்து வசதிகள், மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு வசதியாக சாய்வுதள நடைமேடை வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சார வசதி, தளவாட சாமான்கள், மேற்கூரை பராமரிப்பு, தரை பராமரிப்பு, ஜன்னல் பராமரிப்பு, சாய்வுதளம் பராமரிப்பு, நுழைவு வாயில் பராமரிப்பு, கழிப்பறை பராமரிப்பு, இணையதள வசதி ஆகியவை முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து, நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம்(Ballot paper) பொருத்தும் பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், நிலக்கோட்டை HNUPR மேல்நிலைப்பள்ளியில் காவல் துறையினர் தபால் வாக்குப்பதிவு செய்யும் மையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், அம்மையநாயக்கனூர் வட்டார மருத்துவ மையத்தில், வாக்குப்பதிவு நாள் அன்று தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள முகக்கவசம், கையுரை, வெப்பநிலை பரிசோதனை கருவி, கிருமிநாசினி, முழு உடல் கவசம்(பிபிஇ கிட்ஸ்) போன்ற கொரோனா வைரஸ் தடுப்பு உபகரணங்களை பார்வையிட்டார்.

குறிப்பாக வாக்குப்பதிவு நாள் 06.04.2021 அன்று வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்வதற்கு போதிய பணியாளர்களை நியமிக்கவும், மாற்றுத்திறனாளிகளை அழைத்து செல்வதற்கு தேவையான தன்னார்வலர்களை நியமிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, நிலக்கோட்டை வட்டாட்சியர் திரு.சுப்பையா, வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் தேர்தல் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.