Close

Election- Training Class for Officials

Publish Date : 18/03/2021
Eltr

செ.வெ.எண்:-28/2021

நாள்:-18.03.2021

திண்டுக்கல் மாவட்டம்

வாக்குப்பதிவு மையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு 3 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படுகிறது – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., தகவல்.

திண்டுக்கல் அச்சுதா மெட்ரிக் பள்ளியில் இன்று(18.03.2021) வாக்குப்பதிவு மையத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பினை திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவித்ததாவது:-

நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 25,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்குப்பதிவு மையத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு அந்தந்த தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று(18.03.2021) நடைபெறுகிறது.

முதற்கட்டமாக வாக்குச்சாவடி மையத்தில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தொலைக்காட்சி மூலம் மண்டல அலுவலர்களால் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவும் பயிற்சி அளிக்கும் மண்டல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவி ஆகியவற்றை பயன்படுத்துதல், தேர்தல் நாள் அன்று வாக்குப்பதிவு மையத்திற்கு தேவையான உபகரணங்கள், பயன்படுத்தப்படும் படிவங்கள் மற்றும் பதிவேடுகள் குறித்து செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. தபால் வாக்குச்சீட்டு பெறுதல் தொடர்பாகவும் பயிற்சி அளிக்கப்படடுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் பயிற்சி அளிக்கப்பட்டது. கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தல் உட்பட கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கான இரண்டாவது கட்ட பயிற்சி வகுப்பு 26.03.2021 அன்றும், மூன்றாவது கட்ட பயிற்சி வகுப்பு 05.04.2021 அன்றும் நடைபெற உள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, துணை ஆட்சியர்(பயிற்சி) திரு.இரா.இரா.விஸ்வநாதன் மற்றும் தேர்தல் பணி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.