ELTAI- India Reads – English Teaching
செ.வெ.எண்:-09/2025
நாள்:-04.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாணவர்களுக்கு ஆங்கில மொழியில் வாசிப்புப் பயிற்சி அளிப்பதற்கான ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான பயிற்சி ‘India Reads’ இயக்கம் சார்பில் 11.06.2025 முதல் 14.06.2025 வரை கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
அகிய இந்திய அளவிலான ஆங்கில மொழிப் பயிற்சி ஆசிரியர்களின் அமைப்பானது (English Language Teachers’ Association of India – ELTAI) நாடு தழுவிய வாசிப்பு இயக்கத்தைக் கையிலெடுத்துள்ளது. இயக்கத்திற்கு ‘India Reads’ (இந்தியா வாசிக்கிறது) எனப் பெயரிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் “கார்டெக்“ நிறுவனத்துடன் இணைந்து ‘India Reads’ இயக்கம் தற்போதைக்கு கொடைக்கானலில் நடைபெறுகிறது. கொடைக்கானல் வட்டாரத்தில் அமைந்துள்ள அரசுப் பள்ளிகளான 11 நடுநிலைப் பள்ளிகள், 6 உயர்நிலைப்பள்ளிகள், 4 மேல்நிலைப்பள்ளிகளில் 6ம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில மொழி பயிற்சி அளிக்கப்படுகிறது. இதே மாணவ, மாணவிகள் 7வது வகுப்பு செல்லும்போதும், 8-ஆம் வகுப்பு செல்லும்போதும் வழிநடத்தப்படுவர். இந்த இயக்கத்திற்கான கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில மொழியில் வாசிப்புப் பயிற்சி அளிப்பதற்கான ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான பயிற்சி முகாம் 11.06.2025 முதல் 14.06.2025 வரை கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து 14.06.2025 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ‘India Reads’ இயக்கத்தை தமிழ்நாடு பாடநுால் நிறுவனத் தலைவர் திரு.திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார். நிகழ்ச்சியில் தொடக்கக்கல்வி இயக்குநர் முனைவர் பி.ஏ.நரேஷ் அவர்கள் கலந்துகொள்கிறார்.
ஆசிரியர்களுக்கான ஆங்கில மொழி வாசிப்புப் பயிற்சி அளிக்க உத்தராஞ்சல் பல்கலைக் கழகம், பெங்களூர் கிறிஸ்து பல்கலைக் கழகம், ஜாம்ஜெட்பூர் பல்கலைக் கழகம், சென்னை அண்ணா பல்கலைக் கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம் ஆகிய நிறுவனங்களின் ஆங்கில மொழிப் புலமை வாய்ந்த பேராசிரியர்கள் வருகை தரவுள்ளனர். பயிற்சியை மேற்கொள்வோருக்கு எவ்வித கட்டணமும் இல்லை. பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
பயிற்சியை பணிபுரியும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக ஆங்கில மற்றும் பிறபாடங்களைக் கையாளும் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் (குறைந்தது இளங்கலை பட்டப்படிப்பு படித்தவராக இருத்தல் வேண்டும்) மொழிப்புலமை மற்றும் ஆங்கில வாசிப்பு தொடர்பாகப் பயிற்சி பெற விரும்புவோர் 10.06.2025-ஆம் தேதிக்கு முன்னர் 99943 52335 என்ற எண்ணிற்கு அலைபேசி மூலமாக அல்லது வாட்ஸ்அப் மூலமாக பதிவு செய்து பயன்பெறலாம். பதிவுக் கட்டணம் இல்லை. பெண்களுக்கு தங்கும் இடவசதி பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதியுள்ள அனைவரும் பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.