Close

Employment Skill Development Awareness Rally

Publish Date : 08/07/2019
1

செ.வெ.எண்:-24/2019 நாள் : 08.07.2019

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன்வாரம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம், அனைத்து மகளிர்; காவல் நிலையம் அருகில் இன்று (08.07.2019) தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன்வாரம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து தெரிவித்ததாவது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் கம்பெனி சட்டம், பிரிவு எண் 25ன் கீழ் இலாபம் ஈட்டா கம்பெனியாக 2013 முதல் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் மூலம் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் எய்தும் இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் நடத்தப்படும் அனைத்து திறன் எய்தும் பயிற்சிகளுக்கான ஒருங்கிணைப்பு முகமையாக விளங்குகிறது. இந்நிறுவனம் மூலம் மத்திய, மாநில அரசுத்துறைகள் மற்றும் சிறந்த தனியார் நிறுவனங்கள் வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேற்கண்ட திறன் பயிற்சிகள் அறிவித்துள்ள திறன் பயிற்சிக்கான வழிகாட்டி நெறிமுறைகளின் அடிப்படையில் திறன் பயிற்சி அளிக்கப்படுவதை உறுதி செய்வதுடன் சிறந்த முறையில் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பும் பெற்றுத்தருகிறது.

5-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்ற ஒவ்வொருவரின் கல்விக்கு ஏற்றவாறு வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் 33-க்கும் மேற்பட்ட முன்னணி தொழிற்துறைகளில் திறன் பயிற்சிகளை கட்டணம் ஏதுமின்றி வழங்கி வருகிறது. தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு மற்றும் தனியார் திறன் பயிற்சி நிலையங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு போக்குவரத்து செலவினத்திற்காக நாள் ஒன்றுக்கு ரூ.100 வீதம் வழங்கப்படுகிறது. பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு பயிற்சி புத்தகம், எழுது பொருள், புத்தகப்பை மற்றம் மேல் சட்டை கட்டணமின்றி வழங்கப்படுகிறது. இந்த விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் ஜீலை இரண்டாம் வாரத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு 08.07.2019 முதல் 15.07.2019 வரை தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் குறித்த நிகழ்ச்சிகள் வேலை வாய்ப்பு அலுவலகம், தொழில் பயிற்சி நிலையம், பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படுவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாய்ப்பினை பயன்படுத்தி, படித்த வேலைவாய்ப்பற்ற இளஞர்கள் திறன் பயிற்சி பெற்று பயனடையுமாறு, திறன் பயிற்சி பெற www.tnskill.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யுமாறு, மேலும் விபரங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலம் மற்றும் உதவி இயக்குநர் திறன் பயிற்சி அலுவலகத்தில் விபரங்களை தெரிந்து பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன்வாரம் விழிப்புணர்வு பேரணியில், சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிற் பயிற்சி நிலைய மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியும், கையில் தொழில் நெறி விழிப்புணர்வு குறித்த பதாகைகளை கையில் ஏந்திய படி சென்றனர்.

இந்த விழிப்புணர்வு பேரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தி;ல்; தொடங்கி திண்டுக்கல் தலைமை தபால் நிலையம், காமராஜர் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தி;ல நிறைவடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் திறன் பயிற்சி குறித்த துண்டு பிரசுரங்கள் மற்றும் வாசகங்கள் அடங்கிய பதாததைகள் ஏந்தி சென்றனர்.

இப்பேரணியில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் திருமதி.சு.காமேஸ்வரி, மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் திருமதி.ஸ்டெல்லா மற்றும் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையம் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்