Close

Environment -Climate Change Mission

Publish Date : 20/11/2023
.

செ.வெ.எண்:-44/2023

நாள்: 17.11.2023

திண்டுக்கல் மாவட்டம்

காலநிலை மாற்றம் குறித்த பயிலரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (17.11.2023) தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் திண்டுக்கல் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் சார்பில் காலநிலை மாற்றம் குறித்த மாவட்ட அளவிலான பயிலரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இப்பயிலரங்கத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளவும், அதன்விளைவுகளை தடுக்கவும் வருங்கால சந்ததியினருக்கு ஒரு விரிவான விழிப்புணர்வு தேவை என்பதால், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஈரநில இயக்கம் ஆகிய சுற்றுச்சூழல் சார்ந்த இயக்கங்களை உருவாக்கியுள்ளார்.

காலநிலை நெருக்கடி மிகவும் பரவலாகவும் கடுமையாகவும் மாறி வருவதால் காலநிலை கொள்கை மற்றும் திட்டமிடலின் முக்கியத்துவத்தினை உணர்த்தவும், அதற்கு ஏற்ற தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

மாவட்ட அளவில் காலநிலை மாற்ற இயக்கத்தை அமைத்து பல்வேறு அரசு துறைகள், சுற்றுச்சூழல் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிலையில் பயிற்சி, கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் சார்பில் இன்றைய தினம் இப்பயிலரங்கம் நடத்தப்படுகிறது

பூமி வெப்பமடைதல், வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைடு உள்ளிட்ட வாயுக்களின் அளவு அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக மழை, வெயில் மற்றும் காற்று ஆகியவற்றின் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனை எதிர்கொள்ளவும், கட்டுப்படுத்தவும் அறிவியல் விஞ்ஞானிகள் வழங்கியுள்ள ஆலோசனை பின்பற்றி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் அந்ததந்த பகுதியில் மண் வளத்திற்கு ஏற்ற பாரம்பரிய மரக்கன்றுகளை நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூமியில் உயிரினங்கள் நீடித்து வாழ பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை தவிர்க்க வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பினாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை தவிர்க்கும் பொருட்டு மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.

எனவே, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும், மாறி வரும் சூழ்நிலைகளை அரசு வழங்கும் ஆலோசனைகளை பின்பற்றி கையாளவும் பொதுமக்கள் தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்த காலநிலை மாற்றம் குறிந்த விழிப்புணர்வு பயிலரங்கத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பைக்கு மாற்றாக மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில காலநிலை மாற்ற இயக்கத்தின் இணை இயக்குநர் திருமதி எல்.சௌமியா, மாவட்ட வன அலுவலர் திரு. பி.எம்.ராஜ்குமார், இ.வ.ப., அவர்கள், உதவி வன பாதுகாப்பு அலுவலர்கள் திரு.சீனிவாசன், திரு.சக்திவேல், மாவட்ட பசுமைத் தோழர் திரு.கா.ஜெயக்குமார், வனத்துறை, வேளாண்மைத்துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள், பொதுப்பணித்துறை உட்பட பல்வேறு துறை அலுவலர்கள், அரசு சாரா அமைப்பு பிரதிநிதிகள், தொழில்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் சுலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.