Close

Fish Department

Publish Date : 20/03/2019

1ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்

செ.வெ.எண்:- 28/2019 நாள்:- 20.03.2019
திண்டுக்கல் மாவட்டம்

ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன் வளர்ப்புக்கு தடை செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப.,அவர்கள் தகவல்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்நாட்டு மீன்வளர்ப்பில் இந்திய பெருங்கெண்டை மீன்வகைகளான கட்லா, ரோகு, மிர்கால் மற்றும் சீன பெருங்கெண்டை மீன்வகைகளான வெள்ளிக்கெண்டை புல்கெண்டை சாதா கெண்டை மற்றும் மரபியல் மேம்படுத்தப்பட்ட வளர்ப்பு திலேபியா மீன்குஞ்சுகளை தேர்வு செய்து விவசாயிகள் மீன்வளர்ப்பு பணி மேற்கொண்டு வருவாய் ஈட்டி வருகின்றனர்.

மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது முழுவதுமான தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த மீன் இனங்கள், மற்ற மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களை அதிதீவிரமாக இரையாக உண்ணும் தன்மை உடையது. தமது பாரம்பரிய மீன்கள் மற்றும் வளர்ப்பு மீன்களையும் அவற்றின் முட்டைகளையும் முற்றிலுமாக அழித்து விடும். ஆகையால் நமது நீர்நிலைகளில் உள்ள அனைத்து பாரம்பரிய நீர்வாழ் உயிரினங்களும் அழியும் வாய்ப்பு உள்ளது.
மேலும், இந்த மீன் இனம் காற்றில் உள்ள பிராணவாயுவை சுவாசிக்கும் தன்மையும், மிகக் குறைந்த ஆழம் உள்ள நீர்நிலைகளிலும் இனப்பெருக்கம் செய்யும் தன்மை உடையது. இந்த மீன்கள் பாரம்பரிய உள்நாட்டு கெளுத்தி மீன்களுடன் இனப்பெருக்கம் மேற்கொண்டு அவற்றின் மரபியலை சிதைத்து ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் பல்பெருக்கம் அடையக்கூடிய வல்லமை உடையது. மழை மற்றம் பெரு வெள்ள காலங்களில் இந்த மீன் இனங்கள் வளர்ப்பு செய்யம் குளங்களில் இருந்து தப்பி வெளியேற வாய்ப்பு உள்ளதால், தப்பித்து செல்லும் மீன்கள் உள்நாட்டு நீர்நிலைகளில் மற்ற பாரம்பரிய மீன்களை முற்றிலும் அழித்து பல்பெருக்கம் அடைந்து ஒரு கால கட்டத்தில் அனைத்து நீர்நிலைகளிலும் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களைத் தவிர பிற மீன்கள் இல்லாத நிலை உருவாகும். இதனால் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்.

எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகளால் தடை செய்யப்பட்டு உள்ள ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது குற்றமாகும். எனவே, இது தொடர்பாக புகார்கள் ஏதேனும் வந்;தால், அந்த மீன்களை முற்றிலும் அழிக்க அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். பொது மக்களும் இவ்வகை மீன்களை வாங்க வேண்டாம். மீன்வளத்துறை மற்றும் மீன்வள பல்கலைக்கழகத்தின் மூலம் பரிந்துரை செய்யப்படும் மீன் இனங்களை மட்டும் வளர்க்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.