Food safety Meeting – Kodaikannal

செ.வெ.எண்:-26/2023
நாள்:-19.04.2023
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நியமன அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு கோடைகாலத்தில் ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து, இயற்கை காட்சிகளை கண்டுகளித்தும், குளிர் தட்பவெட்ப நிலையை அனுபவிக்கும் வகையில் சில தினங்கள் தங்கியும் செல்வார்கள். அவர்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மரு.த.கலைவாணி அவர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுவினர் 18.4.2023 மற்றும் 19.04.2023 ஆகிய இரு தினங்கள் கொடைக்கானலில் லாஸ்கட் ரோடு, பெண்டர் ரோடு, லேக் ரோடு, அப்சர்வேட்டரி ரோடு, ரைபில் ரேஞ்ச் ரோடு, அண்ணா சாலை, மூஞ்சிக்கல் மற்றும் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது, சுற்றுலா பகுதியில் அமைந்துள்ள 35 எண்ணிக்கையிலான உணவகங்கள் மற்றும் 32 எண்ணிக்கையிலான சாக்லேட் விற்பனை கடைகள் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின்போது அதிக செயற்கை நிறங்கள் பயன்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் திறந்த நிலையிலும், மேலும் செய்தி தாள்களில் மடித்து விநியோகம் செய்ததையும் கண்டுபிடித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. செயற்கை சுவையூட்டி பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தல், உணவு பொருட்களை திறந்த நிலையில் வைத்திருத்தல், உணவு தயாரிக்கும் இடத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்காத நிறுவனங்கள், உணவகங்களில் கையுறை மற்றும் தலையுறை அணியாத பணியாளர்கள், காலாவதியான உணவு பொருட்கள் வைத்திருந்த உணவு வணிகர்கள், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்திற்கு முரணான வகையில் உணவு தயாரித்த 18 உணவகங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு, தலா ரூ.3,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறைகள் நிவர்த்தி செய்து புகைப்பட ஆதாரத்துடன் அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காலாவதியான உணவு பொருட்கள் 13 கிலோ பறிமுதல் செய்து, அழிக்கப்பட்டது. மேலும் கடுமையான உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு முரணான வகையில் இருந்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என கடுமையான எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் சுத்தமான முறையிலும், சுகாதாரமான முறையிலும் உணவு தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆய்வில் உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் வைத்துள்ளார்களா, காலாவதியான பொருட்கள் உணவு வணிக நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ளது போன்றவற்றை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து திண்டுக்கல் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, நியமன அலுவலர் மரு.த.கலைவாணி அவர்கள் தெரிவித்ததாவது:-
உணவு வணிகர்கள் தரம் குறைவான மற்றும் பாதுகாப்பற்ற உணவு பொருட்களை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ, இருப்பு வைக்கவோ கூடாது என்று எச்சரிக்கப்படுகிறது. மேலும் மாநில அளவிலான உணவு பொருட்கள் தரம் பற்றிய புகார்களை 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணை பயன்படுத்தி தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்கள் குறித்த விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.