General Election to Lok Sabha 2019 – Essential documents for Voting

Publish Date : 11/04/2019

செ.வெ.எண்:- 10/2019 நாள்:- 11.04.2019
திண்டுக்கல் மாவட்டம்

நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2019 மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக புகைப்பட வாக்காளர் சீட்டுகள் (Voter’s Slip) சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலமாக 11.04.2019 முதல் வாக்காளர்களுக்கு அவர்களது இருப்பிடத்திலேயே வழங்கப்பட உள்ளது – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்., இ.ஆ.ப., அவர்கள் தகவல்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2019 மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக புகைப்பட வாக்காளர் சீட்டுகள் (Voter’s Slip) சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலமாக 11.04.2019 முதல் வாக்காளர்களுக்கு அவர்களது இருப்பிடத்திலேயே வழங்கப்பட உள்ளது. எனவே, வாக்காளர்கள் தங்களுக்குரிய புகைப்பட வாக்காளர் சீட்டினை சம்பந்தபட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலளிடமிருந்து தவறாமல் பெற்றுக்கொண்டு தேர்தல் நாளன்று தங்களது வாக்கினை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இருப்பினும் தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, தேர்தல் நாளன்று வாக்களார்கள் தங்களது வாக்கினை பதிவு செய்வதற்கு புகைப்பட வாக்காளர் சீட்டினை (Voter’s Slip) சீட்டின் இணைப்பில் தெரிவித்துள்ளவாறு வாக்களார் அடையாள அட்டை அல்லது இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள பின்வரும் 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினைக் காண்பித்து தங்களது வாக்கினைப் பதிவு செய்யலாம்.
1. கடவுச்சீட்டு

2. ஓட்டுநர் உரிமம்

3. மத்திய / மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் / வரையறுக்கப்;பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்

4. வங்கி / அஞ்சலக கணக்குப்புத்தகங்கள் (புகைப்படத்துடன் கூடியது)

5. நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN CARD)

6. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை.

7. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை

8. தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை

9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்.

10. பாராளுமன்ற / சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை.

11. ஆதார் அட்டை

என மேற்கண்ட 11 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்., இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.