Close

Government honors -Organ donors

Publish Date : 01/02/2024
.

செ.வெ.எண்:-65/2024

நாள்:-29.01.2024

திண்டுக்கல் மாவட்டம்

வேல்வார்கோட்டை கிராமம், புதுப்பாளையத்தைச் சேர்ந்த திரு.செல்வக்குமார் என்பவர் விபத்தில் காயமடைந்து உயிரிழந்ததையடுத்து, உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டதையடுத்து, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக அன்னாரது உடலுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி இ.ஆ.ப., அவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் வட்டம், வேல்வார்கோட்டை கிராமம், புதுப்பாளையத்தைச் சேர்ந்த திரு.செல்வக்குமார்(வயது 41) என்பவர் விபத்தில் காயமடைந்து உயிரிழந்ததையடுத்து, அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. அதையடுத்து, புதுப்பாளையத்தில் இன்று(29.01.2024) நடைபெற்ற இறுதிச்சடங்கில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் அன்னாரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகிறது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலில் அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினை போற்றிடும் வகையில், தமிழகத்தில் இறந்த பின்னர் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் வட்டம், வேல்வார்கோட்டை கிராமம், புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் திரு.செல்வக்குமார்(வயது 41). இவர் 25.01.2024 அன்று கானப்பாடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து, மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று(29.01.2024) உயிரிழந்ததையடுத்து, அவரது குடும்பத்தினர், அவரது கண்கள், இதயம், சிறுநீரகங்கள் போன்ற முக்கிய உடல் உறுப்புகளை தானம் கொடுக்க சம்மதித்ததையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டன.

உடல் உறுப்புகளை தானம் செய்த திரு.செல்வக்குமாரின் இறுதிச்சடங்கில் அன்னாரது உடலுக்கு இன்று(29.01.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் அரசு சார்பில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சௌ.சரவணன், வேடசந்துார் வட்டாட்சியர் திருமதி விஜயலட்சுமி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.