Government honors -Organ donors
செ.வெ.எண்:-44/2024
நாள்:-16.09.2024
திண்டுக்கல் மாவட்டம்
உடல் உறுப்புகள் தானம் செய்த திரு.அஜய் உடலுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், நாகையகவுண்டபட்டியை சேர்ந்த திரு.அஜய் விபத்தின் காரணமாக உயிரிழந்தை தொடர்ந்து அவர் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதனை தொடர்ந்து அன்னாரது உடலுக்கு இன்று(16.09.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆர்.எம்.காலனி மின்மயானத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகிறது. குடும்ப உறுப்பினர்கள் சாலை விபத்தில் மரணம் அடைந்த துயரச் சூழலில் அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினை போற்றிடும் வகையில், தமிழகத்தில் இறந்த பின்னர் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அவர்களின் இறுதிச்சடங்கில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், ஒருத்தட்டு கிராமம் உட்கடை நாகையாகவுண்டபட்டி பகுதியை சேர்ந்த திரு.பழனிச்சாமி என்பவர் மகன் திரு.அஜய் (வயது 23) அவர்கள் 15.09.2024 அன்று இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொது விபத்து ஏற்பட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (16.09.2024) உயிரிழந்தார். அவரது பெற்றோர் திரு.பழனிச்சாமி அவர்கள் திரு.அஜயின் உடலை தானம் செய்வதாக தெரிவித்தார். அதையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவரது உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டது.
அதையடுத்து, திண்டுக்கல் மாநகராட்சி, ஆர்.எம்.காலனி மின்மயானத்தில் இன்று(16.09.2024) நடைபெற்ற இறுதிச்சடங்கில் திரு.அஜய் உடலுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் அரசு சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.அ.கொ.நாகராஜ பூபதி, நிலக்கோட்டை வட்டாட்சியர் திரு.தனுஷ்கோடி, அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.