Government honors – Organ donors

செ.வெ.எண்:-14/2023
நாள்:-05.11.2023
திண்டுக்கல் மாவட்டம்
நிலக்கோட்டை வட்டம், ரெங்கப்பநாயக்கன்பட்டி ஊராட்சி குன்னூத்துப்பட்டியை சேர்ந்த விவசாயி திரு.வேலுச்சாமியின் உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டதையடுத்து, முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக அன்னாரது உடலுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி இ.ஆ.ப., அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகிறது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலில் அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினை போற்றிடும் வகையில், தமிழகத்தில் தமிழகத்தில் இறந்த பின்னர் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்ற மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், ரெங்கப்பநாயக்கன்பட்டி கிராம உட்கடை குன்னுாத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு.கோபால் என்பவர் மகன் திரு.வேலுச்சாமி (வயது56) என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 03.11.2023 அன்று இரவு 8.30 மணியளவில் மூளைச்சாவு அடைந்துள்ளார். இறந்த நபரின் குடும்பத்தினர் சம்மதத்துடன் இறந்தவரின் இரண்டு சிறுநீரகங்களும் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் 04.11.2023 அன்று தானமாக வழங்கப்பட்டன.
உடல் உறுப்புகளை தானம் செய்த திரு.வேலுச்சாமியின் இறுதிச்சடங்கில் அன்னாரது உடலுக்கு இன்று(05.11.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.. உடல் உறுப்புகள் தானம் செய்த திரு.வேலுச்சாமி என்பவருக்கு, மீனாட்சி என்ற மனைவியும், பாண்டி சின்னப்பாண்டி ஆகிய இருமகன்களும் மற்றும் பாண்டியம்மாள் என்ற ஒரு மகளும் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் இறந்த பின்பு உடல் உறுப்புகளை தானம் செய்பவருக்கு அரசு மரியாதை செலுத்துவது இதுவே முதல் நிகழ்வாகும்.
இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ.பாஸ்கரன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர்(பொறுப்பு) திரு.ச.சிவக்குமார், நிலக்கோட்டை வட்டாட்சியர் திரு.த.தனுஸ்கோடி, நிலக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.முருகன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.