Close

Grama Sabha Meeting

Publish Date : 30/01/2024
.

செ.வெ.எண்:-60/2024

நாள்:-26.01.2024

திண்டுக்கல் மாவட்டம்

குடியரசு தினத்தை முன்னிட்டு, ஆத்துார் ஊராட்சி ஒன்றியம், கலிக்கம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் ஊராட்சி ஒன்றியம், கலிக்கம்பட்டி ஊராட்சியில் இன்று(26.01.2024) நடைபெற்ற, கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் சிறப்புப் பார்வையாளராக கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

கலிக்கம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு, குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக அரசு பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அனைத்து துறைகளின் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும், தனி நபர் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமுதாயமும் பயன்பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்களை கிராமப்புறத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் தெரிந்து கொண்டு, பயன்பெறும் வகையிலும், கிராமப்புறங்களின் அடிப்படை வசதிகள், முன்னேற்றங்கள் குறித்து கலந்துரைக்கவும், கிராம சபைக் கூட்டங்கள், மாவட்டம் முழுவதும் நடத்தப்படுகிறது. இன்றைய தினம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது.

இக்கிராம சபை கூட்டத்தில், கிராம நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியில் 01.04.2022 முதல் 31.03.2023 வரையிலான 2022-2023ஆம் ஆண்டு தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் (People’s Plan Campaign) மூலம் 2024-25 ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம் குறித்து விவாதித்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

தங்களது கிராமங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. ஆகவே தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து கிராம வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

நாடு முழுவதும் பெரியம்மை மற்றும் போலியோ போன்ற நோய்கள் ஒழிக்கப்பட்டுவிட்டன. அந்தவகையில் தொழுநோயும் நமது கிராமங்களிலிருந்து விரைவில் ஒழிக்கப்பட அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் தொழுநோய்க்கான கூட்டு மருத்துவ சிகிச்சை முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது. சுகாதாரப் பணியாளர்கள் அனைவரும் வீடுவீடாக சென்று எவருக்கேனும் தொழுநோய் பாதிப்பு அறிகுறி உள்ளதா என்று பரிசோதனை மேற்கொள்கின்றனர். யாருக்காவது வெளிறிய, உணர்ச்சி இல்லாத தேமல், படை போன்று உடல் பகுதியில் இருந்தாலோ, கைகள் மற்றும் கால் பாதங்களில் உணர்ச்சி குறைவு ஏற்பட்டிருந்தாலோ உடனே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஒருவேளை அது தொழுநோயின் அறிகுறியாக இருப்பது தெரியவந்தால், ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை மேற்கொண்டு குணப்படுத்திவிடலாம். இந்நோய் கண்டவர்கள் முழுமையாக கூட்டு மருந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் நிச்சயம் குணமாகி விடலாம். தொழுநோய் பற்றிய தவறான கருத்துக்களை யாரும் நம்ப வேண்டாம். அண்ணல் மகாத்மா காந்தியடிகள் நினைவு நாளினை முன்னிட்டு, ஜனவரி 30-ஆம் தேதி “ஸ்பர்ஷ்” தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக்குடிமக்களாகிய நாம், ஒவ்வொரு தேர்தலின்போதும் அச்சமின்றி, மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும், எந்தவொரு துாண்டுதலும் இன்றி வாக்களிக்க வேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு கல்வி அளித்து, உயர்கல்வி தொடர்வதை உறுதி செய்ய வேண்டும். குழந்தை திருமணத்தை நடத்தவோ, ஆதரிக்கவோ கூடாது. பெண் குழந்தைகளுக்கு எதிரான எந்தவித குற்றங்கள் குறித்த தகவல்களை உரிய அலுவலர்களிடமோ, 1098 அல்லது 181 ஆகிய இலவச தொலைபேசி உதவி எண்கள் வாயிலாகவோ சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் அளிக்க வேண்டும். பெண்குழந்தைகளின் பெருமையை போற்றி எதிர்காலத்தில் பெண்குலம் தழைக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி, வாக்காளர் உறுதிமொழி, பெண்குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் உறுதிமொழிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாசிக்க அனைவரும் உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.

வெளி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துாய்மை பணி மேற்கொண்ட துாய்மைப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

இக்கூட்டத்தில், ஆத்துார் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி மு.மகேஸ்வரி முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.சிவக்குமார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி பூங்கொடி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திரு.பெருமாள்சாமி, உதவி இயக்குநர்(ஊராட்சி) திரு.கருப்பசாமி, ஆத்துார் ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் திருமதி ம.ஹேமலதா மணிகண்டன், கலிக்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி கோமதி செல்வக்குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.