Close

Grama Sabha Meeting – Reddiyarchatram Union – Karisalpatti Panchayat

Publish Date : 03/11/2023
.

செ.வெ.எண்:-01/2023

நாள்:-01.11.2023

திண்டுக்கல் மாவட்டம்

ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கரிசல்பட்டி கிராம ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார்.

உள்ளாட்சிகள் தினத்தை(நவம்பர் 01) முன்னிட்டு, கிராம ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டம் நடத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் இன்று(01.11.2023) கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கரிசல்பட்டி கிராம ஊராட்சியில் நடைபெற்ற, கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப. அவர்கள் சிறப்புப் பார்வையாளராக கலந்து கொண்டார்.

கூட்டத்தில், நவம்பர் 1-ஆம் நாளினை தமிழகத்தின் உள்ளாட்சிகள் தினமாகக் கொண்டாடப்படும் என அறிவிப்பு செய்து அதனைச் சிறப்பிக்கும் விதமாக இன்று கிராம சபை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கிராமசபை கூட்டம் வாயிலாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழக அரசு பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அனைத்து துறைகளின் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும், தனி நபர் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமுதாயமும் பயன்பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்களை கிராமப்புறத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் தெரிந்து கொண்டு, பயன்பெறும் வகையிலும், கிராமப்புறங்களின் அடிப்படை வசதிகள், முன்னேற்றங்கள் குறித்து கலந்துரைக்கவும், கிராம சபைக் கூட்டங்கள், ஆண்டுக்கு 6 முறை நடத்தப்படுகிறது. இன்றைய தினம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 ஊராட்சிகளிலும் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டது.

பொதுமக்களின் நலனுக்காக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கிராமசபைக் கூட்டங்கள் வாயிலாக பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் விளக்கம் அளிக்கின்றனர். கிராம சபைக் கூட்டங்கள் அரசு அலுவலர்களுக்கும், பொதுமக்களும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக அமைகிறது.

இக்கிராம சபைக் கூட்டத்தில் வழக்கமான விவாதப் பொருட்கள் தவிர, கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல், கிராம வளர்ச்சி திட்டம் (VPDP), அனைத்து கிராம அண்ணா மறுமலu;ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), திறந்த வெளியில் மலம் கழிதலற்ற நிலையை தக்க வைத்தல், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள், நெகிழிக்கு மாற்று பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவித்தல், நெகிழிக் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு, பொது அறிவிப்புகள், ஜல் ஜீவன் இயக்கம், மாற்றுத் திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதர இயக்கம் குறித்து விவாதித்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்களை கிராம ஊராட்சிகள் மேற்கொள்ள வேண்டும். தாழ்வான மற்றும் மழைநீர் தேங்கக்கூடிய வாய்ப்புள்ள பகுதிகளை அடையாளங்கண்டு அவ்விடங்களில் மழைநீர் தடையில்லாமல் செல்லும் வகையில் வழி ஏற்படுத்திட வேண்டும். புயல் பாதுகாப்பு மையங்களை சுத்தப்படுத்தி தயார் நிலையில் வைத்தல் வேண்டும். புயல் பாதுகாப்பு மையங்களில் குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி கழிப்பிட வசதி போன்றவற்றை பயன்படுத்திடும் வகையில் தயார்நிலையில் வைத்தல் வேண்டும். பருவமழை தொடங்குவதற்கு முன்பே வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை நீக்கி, மழைநீர் வழிந்தோடுவதற்கான வகையை ஏற்படுத்தல் வேண்டும். தேவையான மணல் முட்டைகள், சவுக்குக் கட்டைகள் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும். ஏரிகள், பாசன ஏரிகள், குளம், குட்டைகள் போன்றவற்றின் கரைகளை கண்காணிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் மூலம் அவ்வப்போது தரப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டெங்கு கொசுக்கள் சுத்தமான தண்ணீரில்தான் உருவாகின்றன. எனவே டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுத்திட தண்ணீர் தொட்டிகளை மூடி வைத்திட வேண்டும். டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் வீடுவீடாக வரும்போது கொசு தெளிப்பு மருந்துகளை தண்ணீர் தொட்டியில் தெளிக்க அனுமதிக்க வேண்டும்.

வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, தொழில் உரிமக் கட்டணம், மனைப்பிரிவு அங்கீகாரம் மற்றும் கட்டட அனுமதி போன்றவை தற்போது இணையவழி செலுத்தும் முறை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஊராட்சியிலுள்ள பொதுமக்கள், தங்களுடய வீட்டு வரி, சொத்து வரி ஆகிய விவரங்கள் சரியாக உள்ளதா, என்பதையும் தங்களது கைப்பேசி எண்கள் சரியாக உள்ளீடு செய்யப்பட்டுள்ளதா, என்பதையும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள், எளிதாக வரி செலுத்துதல் மற்றும் இரசீது பெறுதல் போன்றவற்றை இணையம் வழி வாயிலாக பெறலாம்.

வரி வருவாய் மூலம் கிராமங்களில் வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு பெற்று வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்த இயலும். நமக்கு நாமே திட்டத்தில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியும்.

நெகிழி பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, நெகிழிக்கு மாற்று பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். நெகிழிக் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பொதுமக்கள் இதுபோன்ற கிராமசபைக் கூட்டங்களில் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்து, பொதுவான கோரிக்கைள் தொடர்பாக மனுக்கள் அளிக்க வேண்டும். அந்த மனுக்களை மாவட்ட நிர்வாகம் பரிசீலனை செய்து, நிறைவேற்ற வாய்ப்ப ஏற்படும். தங்கள் கிராமங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. ஆகவே தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து கிராம வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும், என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், கிராம ஊராட்சியின் வளர்ச்சியில் முதுகெலும்பாகத் திகழும் மகளிர் சுய உதவிக்குழுக்களை ஊக்குவிக்கும் பொருட்டு சிறப்பாக செயல்பட்ட மகளிர் சய உதவிக்குழுக்களுக்கு கிராமசபை கூட்டம் வாயிலாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கொரோனா பெருந்தொற்று காலம் முதல் தற்போது “நம்ம ஊரு சூப்பரு” இயக்கத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சிறப்பாக சேவை புரிந்த துாய்மைக் காவலர்கள் உள்ளிட்ட துாய்மைப் பணியாளர்களுக்கு கிராம சமை மூலம் பாராட்டு தெரிவித்து, துாய்மைக் காவலர்களுக்கு சீருடைகள், கையுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள், அங்கன்வாடி குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் வண்ணச் சீருடைகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சிததலைவர் அவர்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திரு.ப.க.சிவகுருசாமி, வேளாண்மை இணை இயக்குநர் திருமதி அனுசுயா, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் திரு.பெ.நா.இராம்நாத், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருமதி ஆரோக்கிய சுதா செல்வி, கரிசல்பட்டி ஊராட்சித்தலைவர் திரு.பால்ராஜ், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.மிக்கேல் அம்மாள், தோட்டக்கலை துணை இயக்குநர் திரு.ஜோ.பெருமாள்சாமி, உதவி இயக்குநர்(ஊராட்சி) திரு.கருப்பசாமி, ரெட்டியார்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.எஸ்.கிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலர் மரு.ஆராதனா, பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.