Close

Gramasabha meeting

Publish Date : 29/04/2022

செ.வெ.எண்:-83/2022

நாள்:28.04.2022

திண்டுக்கல் மாவட்டம்

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான மே 1-ஆம் தேதி கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான மே 1-ஆம் தேதி அன்று கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியன கிராம ஊராட்சி அலுவலகங்களின் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளன.

மே 1 (தொழிலாளர் தினம்) அன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில், வரவுசெலவு கணக்குகள், பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு மற்றும் அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய கூட்டப்பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.ஊராட்சிகளின் 2021-22 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, ஒன்றிய மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை, விவசாயம் மற்றும் உழவர் நலத்திட்டங்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் உதவி எண், ஊட்டச்சத்து இயக்கம் (POSHAN ABHIYAN) மற்றும் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

இவ்வாறு நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் அவ்வூராட்சியில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்துகொள்வது முக்கிய கடமையாகும். மேலும், கிராம சபை விவாதங்களில் பங்கேற்று, பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். கிராம சபைகளில் பொதுமக்கள் கலந்துகொள்ளும்போது உரிய கொரோனா தடுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.மேலும், கிராம ஊராட்சிகள், தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட கடந்த நிதியாண்டிற்கான வரவு-செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்த்pன் தகவல் பலகையில் வெளிப்படுத்திட வேண்டும். பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ் பேனர் மூலம் வரவு-செலவு கணக்கு (படிவம் 30-ன் சுருக்கம்) வைக்கப்பட வேண்டும். கோடை வெயிலின் காரணமாக கிராம சபைக் கூட்டங்கள் காலை 10 மணி அளவில் நடைபெறும்.எனவே, ஊராட்சிப் பகுதியில் உள்ள மக்கள் கிராம சபைகளில் தவறாது கலந்து கொண்டு விவாதத்தில், தங்களது கருத்துக்களை தெரிவித்து பயன்பெறலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.