GTN Law College Inaugural Ceremony

செ.வெ.எண்:-84/2022
நாள்:31.10.2022
திண்டுக்கல் ஜி.டி.என். சட்டக் கல்லுாரியை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்.
கல்லுாரியில் மாணவர் சேர்க்கையை மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச்சட்ட அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள் தொடங்கி வைத்தார்.
மாணவ, மாணவிகளுக்கு சட்ட பாடநுால்களை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் வழங்கினார்.
திண்டுக்கல்லில் ஜி.டி.என். சட்டக் கல்லுாரி தொடக்க விழா இன்று(31.10.2022) நடைபெற்றது.
விழாவில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் கலந்துகொண்டு திண்டுக்கல் ஜி.டி.என். சட்டக் கல்லுாரியை தொடங்கி வைத்தார். கல்லுாரியில் மாணவர் சேர்க்கையை மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச்சட்ட அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள் தொடங்கி வைத்தார். மாணவ, மாணவிகளுக்கு சட்ட பாடநுால்களை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் வழங்கினார். வகுப்பறையை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகம் துணைவேந்தர் டாக்டர் என்.எஸ்.சந்தோஷ்குமார் அவர்கள் தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ.பாஸ்கரன், வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன், மாவட்ட வன அலுவலர் திரு.எஸ்.பிரபு, இ.வ.ப., ஜி.டி.என். கல்விக் குழுமம் தலைவர் திரு.கே.இரத்தினம், ஜி.டி.என். கல்விக்குழுமம் அறங்காவலர் திரு.எஸ்.இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:-
இந்தியாவிலேயே முதன்முறையாக சட்டப்பல்கலைக்கழகம் தமிழகத்தில்தான் தொடங்கப்பட்டது. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோதுதான், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
நம்முடைய சாதாரண வாழ்க்கை நடைமுறையில் கூட சட்டம் மிகவும் அவசியமானதாக உள்ளது. ஒவ்வொரு குடுத்திற்கும் சட்டம் படித்த ஒருவர் தேவைப்படுகிறது. சட்டம் படித்தவர்கள் மற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கலாம்.
தேசத்தந்தை மகாத்மாகாந்தி அவர்கள் சட்டப்படிப்பு படித்ததால்தான் சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்தி வெற்றிகரமாக நமக்கு சுதந்திரத்தை பெற்றுத்தந்துள்ளார்கள். அதேபோல், டாக்டர் அம்பேத்கார் அவர்கள் சட்டம் படித்ததால்தான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க முடிந்தது. சட்டம் படித்தவர்கள் பலர் உயர்ந்த பதவிகளை வகித்து, அங்கு திறமையாக செயல்பட்டு அந்த பதவிக்கும், தங்களுக்கும் பெருமையை சேர்த்துள்ளனர்.
எந்தத்துறையில் பணிபுரிந்தாலும் அங்க சட்டம் பற்றிய அறிவு தேவைப்படுகிறது. எனவே, இங்கு சட்டம் படிக்க சேர்ந்துள்ள மாணவ, மாணவிகள் வகுப்பறையில் பேராசிரியர்கள் நடத்தும் பாடங்களை நன்கு கவனித்து, படித்து பட்டம் பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும என பேசினார்.
விழாவில், மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச்சட்ட அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள் பேசியதாவது:-
தமிழகத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சி காலத்தில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இது இந்தியாவிலேயே முதன்முறையாக தொடங்கப்பட்ட சட்டப் பல்கலைக்கழகம் ஆகும்.
வெள்ளிவிழா கண்டுள்ள இந்த சட்டப்பல்கலைக்கழகத்தின் புதிய உதயமாக திண்டுக்கல்லில் ஜி.டி.என். சட்டக் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர் தமிழகத்தில் தொடங்கப்படும் முதலாவது சட்டக்கல்லுாரி இதுதான். இன்னும் 7 சட்டக்கல்லுாரிகள் தொடங்கப்படவுள்ளன. முன்பெல்லாம் சட்டப்படிப்பு படிக்க வேண்டும் எனில் சென்னைக்குதான் செல்ல வேண்டும். அதுவும் 700 இடங்கள்தான் உண்டு. தமிழகத்தில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகள் சட்டக் கல்லுாரியில் சேரும் இடமாக தமிழகம் உள்ளது. மாணவ, மாணவிகள் சட்டப்படிப்பை விரும்பி தேர்வு செய்கின்றனர். சட்டப்படிப்பு படித்தால் எந்த துறையிலும் பணிபுரியலாம். எந்தத் துறையில், எந்தப் பணியில் சேர்ந்தாலும் சட்டப்படிப்பு அவசியம் என்பதை உணர்ந்து, மாணவ, மாணவிகள் தற்போது சட்டக்கல்வியை தேர்வு செய்து வருகின்றனர். அனைத்து மாவட்டங்களிலும், சட்டக்கல்லுாரி தொடங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு வீட்டிலும் சட்டம் படித்தவர்கள் இருந்தால் அது அவர்களுக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும் என பேசினார்.
விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சி காலத்தில்தான், திண்டுக்கல் மாவட்டத்தில் நீதிமன்றங்கள் கொண்டுவரப்பட்டு, அதற்காக கட்டட வசதிகள் உருவாக்கப்பட்டன. அந்த வகையில் தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு நீதிமன்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு கல்லுாரிகள் இருந்தாலும், சட்டக்கல்லுாரி இல்லாத குறை இன்று தீர்ந்துள்ளது. அதிகளவிலான மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயிலும் மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தை தொடங்கி, அவர்கள் பள்ளிகளில் படிக்கின்ற காலத்திலேயே, உயர் கல்வியில் எந்தத்துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். மேலும், பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை, சட்டம் போன்ற படிப்புகளில் சேருவதற்கு 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகிறார். மேலும், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை செயல்படுத்தி, பெண்கள் கல்வியில் மேம்பாடு அடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், பெண் கல்வியை ஊக்குவிக்கும் இந்த திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகள் அரசின் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி, தங்களுக்கு கிடைக்கும் கல்வி வாய்ப்புகளை பயன்படுத்தி படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என பேசினார்.
இவ்விழாவில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி கே.பாலபாரதி, திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திரு.ஏ.ராஜா, திண்டுக்கல் மாவட்ட அரசு உரிமையியல் வழங்கறிஞர் திரு.ஆர்.கே.ரவிச்சந்திரன், திண்டுக்கல் வழங்கறிஞர்கள் சங்கத் தலைவர் திரு.வி.மூர்த்தி, செயலாளர் திரு.என்.குமரேசன், சீலப்பாடி ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி ஏ.மீனாட்சி, வார்டு உறுப்பினர் திருமதி ஆர்.தங்கமணி, ஜி.டி.என். சட்டக்கல்லுாரி முதல்வர் முனைவர் பி.அங்கையற்கண்ணி, துணை முதல்வர் திரு.என்.சுடலைமுத்து, பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.