Health Walk – Inaugural Function

செ.வெ.எண்:11/2023
நாள்:-04.10.2023
திண்டுக்கல் மாவட்டம்
“நடப்போம் நலம் பெறுவோம்” எனும் நடைபயிற்சி மேற்கொள்ளும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள், “நடப்போம் நலம் பெறுவோம்” திட்டத்தை சென்னையில் இருந்து காணொலி வாயிலாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று(04.11.2023) தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, இத்திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களின் நல்வாழ்விற்காகவும், பொதுமக்களின் ஆரோக்கியமான உடல் நலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மக்களைத் தேடி மருத்துவ திட்டம், வரும் முன் காப்போம் திட்டம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம் போன்ற திட்டங்களின் வரிசையில் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்காக ”நடப்போம் நலம் பெறுவோம்” எனும் சிறப்புமிக்க திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்கள்.
வரும் முன் காப்போம் என்ற எண்ணத்தில் பொதுமக்கள் நலமுடன் வாழ வழிவகை ஏற்படுத்தும் வகையில், நடப்போம் நலம் பெறுவோம் எனும் நோக்கில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கிலோ மீட்டர் தூரம் கொண்ட நடைபாதைகள் கண்டறியப்பட்டு பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நலவாழ்வு பேணுவதற்கான நடை பயிற்சியினை (Health Walk) ஊக்குவிக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் ஆர்எம் காலனி கூடைப்பந்தாட்ட மைதானத்தில் தொடங்கி இ.வி.ஆர். ரோடு, எம்.வி.எம்., கல்லூரி திருப்பம், ஆர்.எம். காலனி குறுக்கு சாலைகள் வழியாக மீண்டும் கூடைப் பந்தாட்ட மைதானத்தில் முடியும் வகையில் 8 கி.மீட்டர் துாரம் கொண்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலைகள் பொதுமக்கள் நடைபயிற்சி செல்லும் வண்ணம் முழுமையாக செப்பனிடப்பட்டு சுத்தமாக பராமரிக்கப்படுகிறது. பொதுமக்கள் வசதிக்காக சாய்வு இருக்கைகள் மற்றும் குடிநீர் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் நடைபயிற்சியில் புத்துணர்வுடன் கலந்துகொள்ள ஆரோக்கியம் குறித்த வாசகங்கள் பல்வேறு இடங்களில் எழுதப்பட்டுள்ளன. இந்தியாவில் உடல் சார்ந்த நோய்கள் அதிகமாக உருவாவதை தடுத்திடும் வகையில் அனைத்திற்கும் அடிப்படை பயிற்சியாக நடைபயிற்சி அமையும். அதனை அனைத்து பொதுமக்களும் பின்பற்றிடும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி தினமும் 8 கி.மீட்டர் துாரம் அதாவது 10,000 காலடிகள் நடந்தால் சர்க்கரை நோய், இரந்த அழுத்தம் 28 சதவீதம், இதய நோய் தாக்கம் 30 சதவீதம் குறைகிறது என அறியப்படுகிறது. மேலும் நடைபயிற்சியானது நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. எனவே, தமிழக அரசால் முனைப்புடன் செயல்படுத்தப்படும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அனைவரும் பின்பற்றி நலம் பெற வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், வணக்கத்திற்குரிய திண்டுக்கல் மாநகராட்சி மேயரி திருமதி இளமதி ஜோதிபிரகாஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ.பாஸ்கரன், இணை இயக்குநர் (சுகாதார நலப்பணிகள்) மரு.பூமிநாதன், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, துணை இயக்குநர்கள்(சுகாதாரப் பணிகள்) மரு.வரதராஜன், மரு.அனிதா, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர்கள் திருமதி ம.ரோஸ் பாத்திமா மேரி, திரு.கண்ணன், பள்ளி மற்றும் கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.