Higher Education Grievance Day Petition
செ.வெ.எண்:-53/2025
நாள்:-16.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
‘நான் முதல்வன் – உயர்வுக்குப்படி’ உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான மாணவர் சிறப்பு குறைதீர் முகாம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 17.06.2025 அன்று நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தமிழ்நாடு அரசு மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பள்ளிக் கல்வியை முடித்த மாணவ, மாணவிகள் உயர்கல்விப் படிப்பை உறுதி செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிப் படிப்பை முடித்த மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டம் கிராமப்புறங்கள் நிறைந்த மாவட்டம் ஆகும். ஏராளமான மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளிக் கல்வியை கிராமப்புற பள்ளிகளில் படித்து வருகின்றனர். இம்மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டும் நோக்கில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் ‘உயர்வுக்குப்படி – உயர்கல்வி வழிகாட்டி குழு’ அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ‘கட்டுப்பாட்டு அறை’யில் தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த மாணவச் செல்வங்கள் உயர்கல்வி படிப்புகள் மற்றும் கல்லூரிகள் தொடர்பான தங்கள் சந்தேகங்கள், தேவையான விபரங்களை ‘உயர்கல்வி கட்டுப்பாட்டு அறை’யின் கட்டணமில்லா தொலைபேசி எண் 18004250047 அல்லது வாட்ஸ்அப் எண் 7598866000 வாயிலாக தொடர்பு கொண்டு தகுந்த ஆலோசனைகள் பெறலாம். திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை ‘உயர்கல்வி வழிகாட்டி குழு’ உறுப்பினர்கள் மாணவ, மாணவிகளுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்க தயாராக இருப்பர். ‘உயர்கல்வி கட்டுப்பாட்டு அறை’யின் துணை கொண்டு அவரவர்க்கு விருப்பமும், ஆர்வமும் உள்ள படிப்புகளைத் தேர்ந்தெடுத்து உயர்கல்வியைத் தொடரலாம், மேலும், தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, ‘கல்லூரிக் கனவு’ மற்றும் ‘உயர்வுக்குப்படி’ போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரையும் உயர்கல்வியில் சேர்க்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, 12-ஆம் வகுப்பு முடித்த மாணவ/மாணவியருக்காக முதற்கட்ட ‘மாணவர் சிறப்பு குறைதீர் முகாம்’ திண்டுக்கல் மாவட்ட ஆட்சியகரத்தில் 28.05.2025 அன்று நடைபெற்றது. இம்முகாமில் 189 மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். தற்போது, பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றும் இன்னும் உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியருக்காக இரண்டாம் கட்டமாக ‘மாணவர் சிறப்பு குறைதீர் முகாம்’ திண்டுக்கல் மாவட்ட ஆட்சியகரத்தில் 17.06.2025 (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 03.00 மணி முதல் 06,00 மணி வரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 300 மாணவ/மாணவியர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சிறப்பு குறைதீர் முகாமில் இதுவரை உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற/தேர்ச்சி பெறாத மாற்றுத்திறனாளிகள், பட்டியல்/பழங்குடியின வகுப்பினர், ஆதிதிராவிடர்/பழங்குடியின விடுதி மற்றும் கள்ளர் சீரமைப்புத் துறை விடுதிகளில் பயின்ற மாணவ/மாணவியர், உயர்கல்வியைத் தொடருவதற்கான உதவி தேவைப்படும் மாணவ/மாணவியர் கலந்து கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவ/மாணவியரை தங்களுடன் அழைத்து வந்து உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு மாணவ/மாணவியர் பயன் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.