Higher Education special Grievance Day Petition

செ.வெ.எண்:-86/2025
நாள்:-28.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதலுக்காக ‘மாணவர் சிறப்பு குறைதீர் முகாம்’ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதலுக்காக ‘மாணவர் சிறப்பு குறைதீர் முகாம்’ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(28.05.2025) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தல் மற்றும் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் அவர்களின் ஆலோசனையின்பேரில், பள்ளிக் கல்வியை முடித்த மாணவ, மாணவிகள் உயர்கல்விப் படிப்பை உறுதி செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பள்ளிப் படிப்பை முடித்த மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, 12-ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதலுக்காக ‘மாணவர் சிறப்பு குறைதீர் முகாம்’ இன்று நடத்தப்படுகிறது. இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த முகாம் வரும் அக்டோபர் மாதம் வரை 15 நாட்களுக்கு ஒருமுறை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வியை நிறைவு செய்த மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில்வதை உறுதி செய்வதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும். மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் சேருவதற்கான ஆலோசனைகள், திறன் பயிற்சி ஆலோசனைகள், தேவையான சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள், கல்விக் கடனுதவிகள் உள்ளிட்ட அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இந்த முகாம் நடத்தப்படுகிறது. மாணவ, மாணவிகளின் தேவைகள், கோரிக்கைகளை கேட்டறிந்து அது தொடர்பாக விண்ணப்பம் பெற்று துறை அலுவலர்களுடன் ஆலோசித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த மாணவர் சிறப்பு குறைதீர் முகாமில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பட்டியல் மற்றும் பழங்குடியின வகுப்பினர், ஆதிதிராவிடர், பழங்குடியின விடுதி மற்றும் கள்ளர் சீரமைப்புத் துறை விடுதிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் உட்பட உயர்கல்வியைத் தொடருவதற்கான உதவி தேவைப்படும் மாணவ, மாணவிகள், பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
திண்டுக்கல் மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டும் நோக்கில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், ‘உயர்வுக்குப்படி – உயர்கல்வி வழிகாட்டி குழு’ அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ‘கட்டுப்பாட்டு அறை’யில் தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மாணவ, மாணவிகளின் உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களுக்கு கட்டுப்பாட்டு அறையை 18004250047 அல்லது 7598866000 என்ற எண்ணில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்புகொண்டு சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம்.
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, ‘கல்லூரிக் கனவு’ மற்றும் ‘உயர்வுக்குப்படி’ போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரையும் உயர்கல்வியில் சேர்க்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளை கண்டறிந்து அவர்கள் ஊக்கப்படுத்தி தேர்வு எழுதச் செய்து, அவர்கள் உயர்கல்வியில் சேருவதை உறுதி செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 21,000 மாணவ, மாணவிகள் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். அவர்கள் அனைவரும் உயர் கல்வியில் சேருவதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதற்கு உறுதுணையாக மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இந்த பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.
இன்றைய முகாமில் 245 மனுக்கள் பெறப்பட்டன. உடனடி தீர்வு காணும் மனுக்கள் மீது முகாமிலேயே தீர்வு காணப்பட்டன. மற்ற மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இந்த முகாமில் கலந்துகொண்டு பயனடைந்த திண்டுக்கல் மாவட்டம், வெள்ளோடு ஊராட்சி, நரசிங்கபுரத்தைச் சேர்ந்த மாணவி நதியா தெரிவித்ததாவது:-
நான் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 355 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளேன். தந்தை இல்லை. தாய் அங்கன்வாடி மையத்தில் சமையலர் பணி செய்து வருகிறார். அதில் கிடைக்கும் குறைந்த அளவிலான வருமானத்தில்தான் நாங்கள் வசித்து வருகிறோம்.
நான், தனியார் கல்லுாரியில் டி.பார்ம் 2 ஆண்டுகள் மருத்துவப் படிப்பில் சேருவதற்காக விண்ணப்பித்திருந்தேன். ஆண்டுக்கு ரூ.65,000 கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும். எங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலை மற்றும் கல்விக் கட்டணம் செலுத்த உதவி கோரி இன்றைய மாணவர் சிறப்பு குறைதீர் முகாமில் மனு அளித்தேன். கலெக்டர் அவர்கள் எனது மனுவை உடனடியாக பரிசீலித்து, அவருடைய பரிந்துரையின்பேரில், தனியார் கல்லுாரி நிர்வாகத்தின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் எனக்கு கல்விக் கட்டணம் சலுகை வழங்கிட கல்லுாரி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. விண்ணப்பக் கட்டணம் ரூ.500 மட்டும் செலுத்தினால் போதும், கல்விக் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை என்று தெரிவித்தனர். அதையடுத்து, டி.பார்ம் மருத்துவப் படிப்பில் சேர எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
என்னைப் போன்ற ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் உயர்கல்வி படிப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன், என தெரிவித்தார்.
இந்த முகாமில் கலந்துகொண்டு பயனடைந்த திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், எ.கலையம்புத்துாரைச் சேர்ந்த மாணவி அபிநயா தெரிவித்ததாவது:-
நான், பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து, 404 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். தாய் இல்லை. தந்தை கூலித்தொழில் செய்து வருகிறார். நான் இன்ஜினியரிங் படிப்பதற்காக விண்ணப்பித்துள்ளேன். கல்வி உதவித்தொகை பெறுவதற்காக முதல் பட்டதாரி சான்று கோரி இன்றைய மாணவர் சிறப்பு குறைதீர் முகாமில் மனு அளித்தேன். எனது மனுவை அலுவலர்கள் உடனடியாக பரிசீலித்து, எனக்கு சான்றிதழ் வழங்கினர்.
மாணவ, மாணவிகளின் உயர்கல்வி படிப்பை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்க இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன், என தெரிவித்தார்.
இந்த முகாமில் கலந்துகொண்டு பயனடைந்த திண்டுக்கல் மாவட்டம், செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி 11-ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவன் சி.முகேஷ் தெரிவித்ததாவது:-
நான் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறேன். எனக்கு சக்கர நாற்காலி கோரி இந்த முகாமில் மனு அளித்தேன். எனது மனுவை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உடனடியாக பரிசீலித்து, ரூ.1.10 இலட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி வழங்க ஆணை பிறப்பித்தார். அதையடுத்து, எனக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி இன்றைய தினமே வழங்கப்பட்டது. எனது கோரிக்கையை உடனே நிறைவேற்றிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன், என தெரிவித்தார்.
இந்த முகாமில் கலந்துகொண்டு பயனடைந்த திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த மாணவி கு.காளீஸ்வரி தெரிவித்ததாவது:-
நான் 2023-ஆம் ஆண்டு சுப்பிரமணியா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் படித்தேன். தற்போது எனக்கு படிக்க விருப்பம் இருந்ததால் மாவட்ட ஆட்சியரிடம் உதவிக் கேட்டு மனு அளித்தேன். எனக்கு பழனி சின்னக்கலையம்புத்துாரில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லுாரியில் பி.காம்.(சி.ஏ.) படிக்க அனுமதி பெற்றுத்தந்துள்ளார். அதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன், என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உதவி இயக்குநர் திருமதி ச.பிரபாவதி, மாவட்ட திறன் பயிற்சி மையம் உதவி இயக்குநர் திரு.வாசன்பாபு, முன்னோடி வங்கி மேலாளர் திரு.ஆனந்த்பிரபாகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி உஷா, மாவட்டக் கல்வி அலுவலர்கள் திரு.நாகேந்திரன், திருமதி பரிமளா, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.