Close

Home for all Scheme

Publish Date : 24/06/2022
.

செ.வெ.எண்:-65/2022

நாள்:22.06.2022

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் “அனைவருக்கும் வீடு”திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 4,776 ஒப்புதல் பெறப்பட்டு 4,521 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இப்பயனாளிகளில் 2460 நபர்கள் வீடு கட்டி முடித்துள்ளனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செல்படுத்தி வருகிறார்கள். அரசின் நலத்திட்டங்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் சென்றடையும் வகையில், மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியினை ஏற்படுத்தி தரும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. குடிசைப் பகுதிகளை மேம்படுத்துதல் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் முதன்மையான செயல்பாடாக இருந்தாலும், நகர்ப்புற ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த வீட்டுவசதி வாய்ப்புகள் மட்டுமே போதுமானதாக இருக்காது, அவர்களுக்கு குடிநீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, மருத்துவ வசதி, திடக்கழிவு மேலாண்மை, பொது வெளியிடம் போன்ற போதுமான நகர்ப்புற வசதிகளுடன் வீட்டுவசதி ஏற்படுத்துவது அவசியம் என்று கருதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 1.9.2021 அன்று தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் பெயரினை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட்டார்.

குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல, குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 10.6.2022 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.270.15 கோடி மதிப்பீட்டில் 9 திட்டப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 2707 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், 4,880 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளையும், தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 23,826 பயனாளிகளுக்கு தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.500.34 கோடி மதிப்பீட்டிலான பணி ஆணைகளையும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான 718 கிரையப் பத்திரங்களும், மனைகளுக்கான 220 கிரையப் பத்திரங்களும், என 938 பயனாளிகளுக்கு கிரையப் பத்திரங்களை வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 10.06.2022 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் “அனைவருக்கும் வீடு” திட்டத்தில் பயனாளிகள் தாங்களாக வீடு கட்டிக் கொள்ளும் பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியில் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த 48 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினர். இதன் மதிப்பு ரூ.1.01 கோடி ஆகும். ”அனைவருக்கும் வீடு” வழங்கும் திட்டத்தில் ரூ.2.10 லட்சம் மானியத்தொகை வீடுகள் கட்டும் பணியில் பல்வேறு நிலைகளில் வழங்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் “அனைவருக்கும் வீடு” திட்டம் பயனாளிகள் தாங்களாகவே வீடு கட்டிக்கொள்ளும் திட்டத்தின் கீழ் மொத்தம் 4,776 ஒப்புதல் பெறப்பட்டு 4,521 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இப்பயனாளிகளில் 2460 நபர்கள் வீடு கட்டி முடித்துள்ளனர். “அனைவருக்கும் வீடு” வழங்கும் திட்டத்தில் பழனி சட்டமன்ற தொகுதியில் 952 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. பழனி ஊராட்சி ஒன்றியம், தாதநாயக்கன்பட்டி ஊராட்சியில் 264 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. திண்டுக்கல்லில் 30.04.2022 அன்று நடைபெற்ற அரசு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 207 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு, வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்ற வருகிறது.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.