Horticulture Conference – Redyarchatram – Center for Vegetable Excellence

செ.வெ.எண்:-31/2023
நாள்:13.09.2023
திண்டுக்கல் மாவட்டம்
ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மாவட்ட அளவிலான 2 நாட்கள் கருத்தரங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் இன்று(13.09.2023) தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மாவட்ட அளவிலான 2 நாட்கள் கருத்தரங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து தொடங்கி வைத்து, காய்கறி கண்காட்சியை பார்வையிட்டார்.
இக்கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டம் தோட்டக்கலை பயிர்களை முதன்மையாக கொண்டு விளங்குவதால் தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியை பெருக்குவதற்காக விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து தெரிந்து கொள்வது அவசியமாகிறது. மேலும் தமிழ்நாடு அரசு, திண்டுக்கல் மாவட்டம் முருங்கை ஏற்றுமதி மண்டலம், பலா தொகுப்பு முறையில் புதிய இரகங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் மல்லிகை மண்டலம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விவசாயிகளின் நலன் கருதி தோட்டக்கலை பயிர்களான முருங்கை, மல்லிகை மா மற்றும் பல்வேறு தோட்டக்கலை பயிர்கள் குறித்த 2 நாட்கள் கருத்தரங்கம் இன்றும்(13.09.2023), நாளையும்(14.09.2023) நடைபெறுகிறது. இக்கருத்தரங்கில் முருங்கை மற்றும் மல்லிகை பயிர்கள் குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக விஞ்ஞானிகள் அளிக்கும் தொழில்நுட்பங்களை விவசாயிகள் நன்கு அறிந்துகொண்டு முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கருத்தரங்கில் பெரியகுளம், தோட்டக்கலை கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் சு.முத்துராமலிங்கம், முனைவர் செ.சுகன்யா கண்ணா ஆகியோர் ஏற்றுமதிக்கான முருங்கை சாகுபடி மற்றும் முருங்கை, மல்லிகை பயிர்களின் பூச்சி மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்தும், காந்தி கிராமம் கேவிகே முதுநிலை விஞ்ஞானி திரு. சு.செந்தில்குமார், பருவமில்லா காலங்களில் மல்லிகை உற்பத்தி குறித்தும், தடியன்குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் பேராசிரியர் திருரா.பாலகும்பகன், முருங்கை இலை உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்தும், ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அக்ரோ பார்ம் முனைவர் திரு. க.பரமேஸ்வரன், முருங்கை சாகுபடி. தொழில்நுட்பம் குறித்தும், வேளாண் விற்பனை குழு செயாலாளர் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டம்(e-NAM) செயல்பாடுகள் குறித்தும் தொழில்நுட்ப உரையாற்றினர்.
இக்கருத்தரங்கில் தோட்டக்கலை துணை இயக்குநர் திரு.ஜோ.பெருமாள்சாமி, ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையம் தோட்டக்கலை துணை இயக்குநர் திரு.வே.பாலமுருகன், அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் மற்றும் ரெட்டியார்சத்திரம் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.