Close

Horticulture Department – (North East Monsoon)

Publish Date : 10/11/2021

செ.வெ.எண்:-18/2021

நாள்:09.11.2021

2021-ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலைப் பயிர்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழைகாலத்தில் தோட்டக்கலைப் பயிர்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திண்டுக்கல், தோட்டக்கலை துணை இயக்குநர், திரு.ஜோ.பெருமாள்சாமி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

வடகிழக்கு பருவகாலங்களில் தோட்டக்கலைப் பயிர்களை காக்க தகுந்த முன்னேற்பாடு பணிகளை செய்வது அவசியம். அறுவடைக்கு தயாராகும் நிலையில் உள்ள பயிர்களின் அறுவடையை விரைவில் மேற்கொள்ளலாம். கனமழை காரணமாக ஏற்படும் மழைநீர் தேக்கத்தினை குறைக்க நிலத்தில் தகுந்த வடிகால் வசதிகள் ஏற்படுத்த வேண்டும். உபரிநீர் வடிந்தபின் நடவு / விதைப்புப் பணிகளை மேற்கொள்ளலாம். காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் குச்சிகளால் முட்டு கொடுத்து வாழை போன்ற மரங்கள் சாயா வண்ணம் பாதுகாக்கலாம்.

தக்காளி, கத்தரி, மிளகாய் மற்றும் மரவள்ளி போன்ற பயிர்களில்; அடிப்பகுதியில் மண் அணைத்தல் வேண்டும். பந்தல் காய்கறிகள், மலர்ச்செடிகள் போன்றவற்றில் காய்ந்து போன இலைகளை அகற்றி நோய் தடுப்பு மருந்துகள் தெளிக்கவேண்டும். மேலும் பழப்பயிர்களான மா, கொய்யாவில் அதிகப்படியான கிளைகளை கவாத்து செய்வதன் மூலம் பயிர் சேதத்தை தவிர்க்கலாம்.

கண்வலிக் கிழங்கு பயிர் சாகுபடி நிலங்களில் மழைநீர் தேங்காமல் வடிகால் வசதி அமைப்பதோடு பந்தல் இழுவை கம்பிகள் உறுதியாக உள்ளதை உறுதிபடுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கிழங்கு அழுகல் மற்றும் பயிர் சாய்ந்து பயிர் தேசம் ஏற்படுவதை தடுக்கலாம்.

இதேபோல் பசுமைக் குடில், நிழல் வலைக் குடிலின் அடிபாகம் பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதையும், உள்பகுதியில் காற்று உட்புகும் பகுதிகள் இல்லாமல் உள்ளதையும் உறுதி செய்து கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து தகவலுக்கு அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தோட்டக்கலை துணை இயக்குநர், திரு.ஜோ.பெருமாள்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.