Horticulture-Garden kit

செ.வெ.எண்:-13/2021
நாள்:06.12.2021
மாண்புமிகு முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டத்திட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ், மாடித்தோட்ட தளைகள், காய்கறி விதை தளைகள், ஊட்டச்சத்து தளைகள் மானிய விலையில் பெற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தமிழகத்தின் கிராம மற்றும் நகர்ப்புறங்களில் வீட்டுத் தோட்டங்கள் மற்றும் மாடிப்பகுதிகளில் காய்கறிகள், பழங்கள் மற்றும் மூலிகைப் பயிர்கள் பயிரிடுவதை ஊக்குவிக்கும் விதமாக, தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறையின் சார்பில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மாண்புமிகு முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டத்திட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.12.2021) பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து தளைகளை வழங்கி தெரிவித்ததாவது:-
மாண்புமிகு முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் திட்டத்தின்படி, நகரப் பகுதிகளில் 6 வகையான காய்கறி விதைகள், செடி வளர்க்கும் பைகள்-6, இரண்டு கிலோ அளவிலான தென்னை நார் கட்டிகள்-6, 400 கிராம் உயிர் உரங்கள், 200 கிராம் உயிரி கட்டுப்பாட்டு காரணிகள், 100 மி.லி. இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் சாகுபடி முறைகளை விளக்கும் கையேடு ஆகியவை அடங்கிய மாடித்தோட்ட தளைகள் மானிய விலையில் ரூ.225-க்கு வழங்கப்படுகிறது. ஒருவருக்கு அதிகபட்சமாக இரண்டு மாடித் தோட்டத்தளைகள் வரை வழங்கப்படும்.
ஊரகப் பகுதிகளில் காய்கறி தோட்டம் அமைப்பதை ஊக்குவிப்பதற்காக, கத்தரி, மிளகாய், வெண்டை, முருங்கை, சாம்பல், பூசணி மற்றும் கீரைகள் போன்ற 12 வகையான காய்கறி விதை தளைகள் ரூ.15-க்கு வழங்கப்படுகிறது. இக்காய்கறி விதைத்தளையினை ஒருவர், இரண்டு தொகுப்புகள் வரை பெற்றுக்கொள்ளலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்டத்தின்படி, மூலிகை செடிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியுடைய பழங்கள் மற்றும் காய்கறிகளை வளர்த்து பயன்பெற, பப்பாளி, எலுமிச்சை, முருங்கை, கறிவேப்பிலை, திப்பிலி, கற்பூரவல்லி, புதினா மற்றும் சோற்று கற்றாழை ஆகிய 8 செடிகள் அடங்கிய ஊட்டச்சத்து தளைகள் ரூ.25-க்கு வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக ஒரு தொகுப்பு வழங்கப்படும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மாடி தோட்டம் 2,000 தளைகள், மூலிகை தளைகள் 7,000, காய்கறி விதை பொட்டலங்கள் 6,700 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாடித்தோட்ட தளைகள் ரூ.225க்கும், 8 செடிகள் கொண்ட ஊட்டச்சத்து தளைகள் ரூ.25-க்கும் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பொதுமக்கள் https://tnhorticulture.tn.gov.in/kit/ என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, துணை இயக்குநர் (தோட்டக்கலை) திரு.ஜெ.பெருமாள்சாமி உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.