Horticulture – Kodaikanal- NHM
செ.வெ.எண்:-77/2025
நாள்:20.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
கொடைக்கானல் வட்டாரத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டாரத்திற்கு, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் 2025-2026-ஆம் ஆண்டில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் ரூ.168.375 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
தோட்டக்கலைப் பயிர் பரப்பு விரிவாக்கம் இனத்தின் கீழ் அரசு மானியமாக உயர் ரகம் கலப்பின காய்கறி பயிருக்கு ஒரு எக்டருக்கு ரூ.24000 வீதம் 30 எக்டருக்கு ரூ.7.20 இலட்சம், அவகேடோ பயிருக்கு அரசு மானியமாக ஒரு எக்டருக்கு ரூ.30000 வீதம் 60 எக்டருக்கு ரூ.18.00 இலட்சம், பூண்டு பயிருக்கு ஒரு எக்டருக்கு அரசு மானியமாக ரூ.24000 வீதம் 130 எக்டருக்கு ரூ.31.20 இலட்சம், மிளகு பயிருக்கு அரசு மானியமாக ஒரு எக்டருக்கு ரூ.24000 வீதம் 70 எக்டருக்கு ரூ.16.80 இலட்சம் மற்றும் ஏலக்காய் சாகுபடிக்கு அரசு மானியமாக ஒரு எக்டருக்கு ரூ.24000 வீதம் 8 எக்டருக்கு ரூ.1.92 இலட்சம் என ஆக மொத்தம் தோட்டக்கலைப்பயிர் பரப்பு விரிவாக்கம் இனத்தின் கீழ் ரூ.75.12 இலட்சம் மானியமாக நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
நீர் ஆதாரங்களை உருவாக்குதல் இனத்தின் 50 சதவீதம் மானியத்தில் பண்ணைக்குட்டை அமைக்க 2 எண்களுக்கு ரூ.1.50 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
உயர் தொழில்நுட்ப முறையில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்திட 50 சதவீதம் மானியத்தில் பசுமை குடில் அமைக்க 2000 சதுர மீட்டருக்கு ரூ.12.00 இலட்சம், பாதுகாக்கப்பட்ட சூழலில் சாகுபடி செய்யப்படும் கார்னேஷன் மற்றும் ஜெர்பரா பயிருக்கு மறு நடவிற்கு உரிய மானியம் 20,000 சதுர மீட்டருக்கு ரூ.60.00 இலட்சம் மற்றும் பாதுகாக்கப்பட்ட சூழலில் சாகுபடி செய்யப்படும் ரோஜா, கிரைசாந்திமம் மற்றும் லில்லியம் பயிருக்கு மறுநடவிற்கு உரிய மானியம் 3000 சதுர மீட்டருக்கு ரூ.6.75 இலட்சம் ஆக மொத்தம் பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிர் சாகுபடி செய்தல் இனத்தின் கீழ் ரூ.78.75 இலட்சம் மானியமாக நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு நிரந்தர மண்புழு உரக்கூடாரம் அமைக்க 50 சதவீதம் மானியத்தில் 2 எண்களுக்கு ரூ.1.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
தேனீ வளர்ப்பு மூலம் மகரந்த சேர்க்கையை அதிகரித்தல் இனத்தின் கீழ் தேனீ குடும்பம் மற்றும் தேன் பெட்டிகள் 40 சதவீதம் மானியத்தில் 200 எண்களுக்கு ரூ.3.20 இலட்சம் மற்றும் தேன் பிழியும் இயந்திரம், உணவு தர கொள்கலன், வலை மற்றும் தேனீ வளர்ப்புக்கு தேவையான இதர உபகரணங்கள் 40 சதவீதம் மானியத்தில் 20 எண்களுக்கு ரூ.1.60 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
சந்தைப்படுத்துதலுக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துதல் இனத்தின் கீழ் நடமாடும் காய்கறி விற்பனை வண்டி 50 சதவீதம் மானியத்தில் 20 எண்களுக்கு ரூ.3.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
சிறப்பு தலையீடுகள் (Special Intervention) இனத்தின்கீழ் பண்ணைக் கருவிகள் வழங்குதல் 50 சதவீதம் மானியத்தில் 10 எண்களுக்கு ரூ.20,000 மற்றும் வணிக ரீதியலான புதிய இரகங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் பலா சாகுபடியை ஊக்குவித்தல் இனத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் 20 ஹெக்டருக்கு ரூ.3.60 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
மேலும், தர்திஆபா பழங்குடியினர் கிராம முன்னேற்ற இயக்கத் திட்டத்தின் கீழ் FRA பட்டா உடைய விவசாயிகளுக்காக சீத்தாப்பழ சாகுபடி பரப்பு விரிவாக்க இனத்தின் கீழ் 90 சதவீதம் மானியத்தில் ஒரு ஹெக்டருக்கு ரூ.40,500 நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
இத்திட்டங்களில் பயன்பெற ஆர்வமுள்ள கொடைக்கானல் பகுதி விவசாயிகள் https://tnhorticulture.tn.gov.in மற்றும் https://midh.hstpl.com/BeneficiaryRegistration ஆகிய இணையதளங்கள் வாயிலாகவோ, உழவன் செயலியில் பதிவு செய்தோ அல்லது கொடைக்கானல் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகி, புகைப்படம், பட்டா, பயிர் அடங்கல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் ஆகிய ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.