Close

HOUSE FOR ALL

Publish Date : 29/07/2019
PHS1

செ.வெ.எண்:75/2019 நாள்:-27.07.2019

PHS2

 

திண்டுக்கல் மாவட்டம் பாரத பிரதமர் ஊரக குடியிருப்பு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றியம், சில்வார்பட்டி ஊராட்சியில் பாரத பிரதமர் ஊரக குடியிருப்பு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளிடம் வீடு கட்டும் பணிகள் குறித்து இன்று(27.07.2019) திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு செய்து தெரிவித்ததாவது:-

தமிழக அரசு கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்களுக்காக சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியானவர்களுக்கு வீடுகள் கட்டி வழங்கப்பட்டு வருகிறது. இதேபோன்று பாரத பிரதமர் ஊரக குடியிருப்புத் திட்டத்தின் கீழ் ரூ.1.80 இலட்சம் மதிப்பீட்டில் புதிய வீடுகள் கட்டுவதற்கு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, வீடுகள் கட்டுவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டு, பயனாளிகள் வீடுகள் கட்டுவதற்கு தேவையான அனைத்து உதவிகள் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மூலமாக வழங்கப்படுகிறது.

ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் இதுவரை 182 பயனாளிகளுக்கு ரூ.327.60 இலட்சம் மதிப்பீட்டில் பாரத பிரதமர் ஊரக குடியிருப்பு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. சில்வார்பட்டி ஊராட்சியில் 23 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளில் 15 நபர்களுக்கு வீடு கட்டுவதற்கு அரசால் வழங்கப்படும் ரூ.1.80 இலட்சம் பயனாளிகளின் வங்கிக்கணக்கிற்கு மின்னணு பரிவர்த்தனை மூலமாக செலுத்தப்பட்டு, வீடுகள் கட்டி பயனடைந்துள்ளனர். மீதமுள்ள 8 பயனாளிகள் வீடு கட்டுவதற்கான பணிகள் நடைபெறவுள்ளதை இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தினை பயனாளிகள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்கள் அடிப்படை வசதிகளை பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்துகொண்டு கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சில்வார்பட்டி ஊராட்சியில் உள்ள கிராமங்களில் குடிநீர் விநியோகம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், குடிநீர் தொட்டிகளை மாதம் இருமுறை தூய்மையாக சுத்தம் செய்து, பராமரிக்க வேண்டும். சுத்தம் செய்த நாளினை குடிநீர் தொட்டியில் அனைவர் பார்வையில் தெரியும்படி எழுதி வைக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் திருமதி.கவிதா, ரெட்டியார்சத்திரம் வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் திருமதி.விஜயசந்திரிகா, திரு.முகமது மாலிக், ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் திரு.பேக்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்