ICDS -Poshan Abhiyan Month

செ.வெ.எண்:-01/2021
நாள்:-01.09.2021
திண்டுக்கல் மாவட்டம்
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் தனிநபர் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத்தினை மேம்படுத்திடும் வகையில் அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைவளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் தனிநபர் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத்தினை மேம்படுத்திடும் வகையில் அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(01.09.2021) திறந்து வைத்து தெரிவித்ததாவது:-
பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் தனிநபர் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் ஊட்டச்சத்து இயக்கம் (POSHAN Abhiyaan) நடத்த மத்திய அரசால் தீர்மானிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக (National Nutrition Month) கொண்டாடப்பட்டு வருகின்றது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஊட்டச்சத்து இயக்கம் (POSHAN Abhiyaan) குறித்த சிறப்பு, கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளரிளம் மகளிர் மற்றும் குழந்தைகள் ஆகியோரின் ஆரோக்கியம் மற்றும் தனிநபர் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத்தினை மேம்படுத்திடும் வகையில் ஊட்டச்சத்து இயக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
போஷன் அபியான் திட்டத்தின் நோக்கம், 0-6 வயது குழந்தைகளிடையே காணப்படும் குள்ளத்தன்மையை ஆண்டுக்கு 2 சதவீதம் குறைத்தல், 0-6 வயது குழந்தைகளிடையே காணப்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை ஆண்டுக்கு 2 சதவீதம் குறைத்தல், எடை குறைவான குழந்தைகள் பிறப்பை 2 சதவீதம் குறைத்தல், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே காணப்படும் ரத்த சோகையை ஆண்டுக்கு 3 சதவீதம் குறைத்தல், 15 வயது முதல் 49 வயதிற்குட்பட்ட பெண்கள் மற்றும் வளரிளம் மகளிரிடையே காணப்படும் ரத்த சோகையை ஆண்டுக்கு 3 சதவீதம் குறைத்தல், 0-6 வயது குழந்தைகளிடையே காணப்படும் குள்ளத்தன்மையை 58.4 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக 2022 ஆண்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து உணர்த்தும் வகையில் தினமும் ஒவ்வொரு வட்டாரம் சார்பில் ஊட்டச்சத்து கண்காட்சிகள் அமைக்கப்பட உள்ளன. அதன்படி இன்று ஆத்தூர் வட்டார குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில் ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஊட்டச்சத்து பிரமிடு, சிறுதானியத்தில் செய்த உணவுகள், இணை உணவில் செய்த உணவு வகைகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் திருமதி ச.பூங்கொடி, குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்ட அலுவலர்(ஆத்தூர் வட்டாரம்) திருமதி சா.காலின்செல்வராணி, குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்ட மேற்பார்வையாளர் திருமதி சு.சாந்தி, போஷன் அபியான் திட்டம் ஆத்தூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் திருமதி பெ.கௌசல்யா, திட்ட உதவியாளர் திருமதி செ.ஜெயஸ்ரீ உட்பட அலுவலர்கள் மற்றும் ஆத்தூர் வட்டார அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.