ICDS Poshan Abiyan Scheme

செ.வெ.எண்:- 40/2021
நாள்:22.09.2021
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் துறை சார்பாக போஷான் அபியான் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் நடைபெற்ற ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சியினை -மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் துறை சார்பில், போஷான் அபியான் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி இன்று 22.09.2021 நடைபெற்றது. இக்கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப அவர்கள் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து தெரிவித்தாவது:-
இவ்விழிப்புணர்வு கண்காட்சியில் கர்ப்பிணிப் பெண்கள் ஒரு நாளைக்கு உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள், 6 மாதம் வரை தாய்பால் மட்டுமே கொடுப்பதின் அவசியம், ஏழு மாதம் முதல் ஒரு வயது குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவு வகைகள், ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான வினாடி வினா போட்டி நடைபெற்றது. இதன் மூலம் 100 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இக்கண்காட்சியில் ஆரோக்கியமான உணவு வகைகள் மற்றும் அதன் அளவுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
சிறு தானியங்கள், பயிறு மற்றும் பருப்பு வகைகளால், ஆன 30 வகையான உணவுகள் செய்து செய்முறை விளக்கத்துடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சக்தி தரும் உணவுகள், வளர்ச்சி தரும் உணவுகள், வைட்டமின் சத்துக்கள் மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், உணவுகள் அதில் உள்ள நன்மைகள் குறித்த படங்கள் ஆகியன பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள், பின்பற்றவேண்டிய ஊட்டச்சத்து முறைகள் மற்றும் சிறு தானியத்தின் மகத்துவம் குறித்த விளக்கப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கான வளர்ச்சி, கண்காணிப்பு மற்றும் வளர் இளம் பெண்களுக்கு உடல் பருமன் குறியீடு குறித்த விளக்கம் அளிக்கப்படுகிறது. அங்கன்வாடி மையத்தின் மாதிரி வடிவமைக்கப்பட்டிருந்தது. இக்கண்காட்சியில் பங்கேற்றவர்களில் சுமார் 500 நபர்களுக்கு அங்கன்வாடி மையங்களில் வழங்கக்கூடிய இணை உணவில் செய்த சத்துமாவு உருண்டை மற்றும் சத்துமாவு கஞ்சி ஆகியன வழங்கப்பட்டு இணை உணவின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் திருமதி ச.பூங்கொடி, அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் திரு.சுரேஷ் பாபு, அரசு மருத்துவமனை குழந்தைகள் நல தலைமை மருத்துவர் திரு.திருநாவுக்கரசு, இணை இயக்குனர் திருமதி. பூங்கோதை, மருத்துவ அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்; திண்டுக்கல்.