Illam Thedi Kalvi Scheme

செ.வெ.எண்:-03/2021
நாள்:02.12.2021
மாணவர்களின் கற்றல் இடைவெளி, இழப்புகளைக் குறைத்திடும் வகையில், 40 இடங்களில் ‘இல்லம் தேடிக்கல்வி’ திட்டம் மையங்கள் துவக்கம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், சீலப்பாடி குடியிருப்பு பகுதியில், இல்லம் தேடிக்கல்வி மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து, தன்னார்வலர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கி, தெரிவித்ததாவது:-
கொரோனா பெருந்தொற்றுப் பொது முடக்க காலங்களில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவர்களின் கற்றல் இடைவெளி, இழப்புகளைக் குறைத்திடும் வகையில் ‘இல்லம் தேடிக்கல்வி’ என்கிற திட்டம், திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்பொருட்டு பதிவு செய்த தன்னார்வலர்களை அந்தந்த பள்ளி மேலாண்மைக்குழு தேர்வுக்கு பரிந்துரை செய்தது. பரிந்துரை செய்யப்பட்ட தன்னார்வலர்களுக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தில் திறனறித் தேர்வும், கு விவாதமும் நடத்தப்பட்டு விபரங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டன.
அதன் அடிப்படையில் மாநிலத்திட்ட இயக்ககம் மூலம் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட தன்னார்வலர்கள் பட்டியல் திண்டுக்கல் மாவட்டத்திற்கு அனுப்பு வைக்கப்பட்டது. இத்தன்னார்வலர்களுக்கு இரண்டு நாட்கள் கற்றல் கற்பிதத்ல் பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் 40 தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர். கற்றல் கற்பித்தல் பயிற்சிக்கு பின்னர் பள்ளி உற்று நோக்கல் பயிற்சியும் வழங்கப்பட்டது.
கற்றல் கற்பித்தல் பயிற்சி மற்றும் பள்ளி உற்று நோக்கல் பயிற்சி முடித்த தன்னார்வலர்களைக் கொண்டு, 40 இடங்களில் இல்லம் தேடிக்கல்வி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.சீ.கருப்புச்சாமி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித் திட்ட அலுவலர் திரு.த.ஜான்பிரிட்டோ, திண்டுக்கல் கல்வி மாவட்ட அலுவலர்(பொறுப்பு) திருமதி வசந்தா, இல்லம் தேடிக்கல்வித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.குருபிரசாத், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திரு.ஏ.சரணகுமார், திரு.ஏ.சுதாகர், வட்டாரக் கல்வி அலுவலர் திரு.ஜோசப்குழந்தை ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.