Close

Illam Thedi Kalvi Scheme Inauguration

Publish Date : 02/11/2021
.

செ.வெ.எண்:-05/2021

நாள்:02.11.2021

ஆசிரியர்கள் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் – இல்லம் தேடிக்கல்வித் திட்டத்தை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக 1 முதல் 8-ஆம் வகுப்புகள் வரை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடுசெய்வதற்காக தன்னார்வலர்களைக் கொண்டு தினமும் ஒன்றரை மணி நேரம்(மாலை 5 மணி முதல் 7 மணிக்குள்) குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு, மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடிக்கல்வி, எனும் திட்டத்தை, விழுப்புரம் மாவட்டம், முதலியார்குப்பத்தில் 27.10.2021 அன்று துவக்கி வைத்தார்கள்.

அதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் 12 மாவட்டங்களில், இல்லம் தேடிக்கல்வித் திட்டம் துவங்கப்பட்டு, அதற்கான பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் இல்லம் தேடிக்கல்வித் திட்டம் மாவட்ட அளவிலான பயிற்சியை, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் இன்று(02.11.2021) துவக்கி வைத்து தெரிவித்ததாவது:-

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாததால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஊரடங்கு காலத்தில் பள்ளிக்கு சென்று பயிலக்கூடிய கூழல் இல்லாவிட்டாலும், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. ஆனால், நேரடிக்கல்வி தரும் பலனை ஆன்லைன் வகுப்புகளால் முழுமையாக தர முடியாது. மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்வதற்காக தமிழ்நாடு அரசின் கல்வித்துறை சார்பில் இல்லம் தேடிக்கல்வித் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இல்லம் தேடிக்கல்வித் திட்டமானது, மாணவ, மாணவர்களை அவர்கள் வசிப்பிடம் அருகே சென்று தன்னார்வலர்களின் பங்கேற்புடன் மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்பை வழங்க வழிவகை செய்கிறது. இத்திட்டத்தினை பெற்றோர்களும், குழந்தைகளும், பகுதி மக்களும், தன்னார்வலர்களும் நல்லதொரு வாய்ப்பாக பயன்படுத்தி, நம் குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கான பாதையை அமைத்துக்கொடுக்க வேண்டும். தன்னார்வலர்கள் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இத்திட்டம் வெற்றியடையும் வகையில் ஆசிரியர்கள் முழுப்பொறுப்பேற்று செயல்பட வேண்டும்.

தன்னார்வலர்களுக்கான பணி, ஊக்கப்படுத்தும் செயல்பாடுகள், இல்லம் தேடிக்கல்வித் திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுதல், பள்ளி மேலாண்மைக்குழுவின் பங்கு, ஊர்கூடித் தேர் இழுப்போம், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சி குறித்த திட்டமிடல் ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள், படித்த இளைஞர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டிய திட்டம் இந்தத் திட்டமாகும். இத்திட்டம் வீடுகளில் இருந்து படிக்கும் சூழ்நிலை இல்லாத குழந்தைகளுக்கு பேருதவியாக இருக்கும். படித்த இளைஞர்கள் தங்களது ஓய்வு நேரத்தை இதில் பங்கெடுப்பதன் மூலமாக பயனுள்ளதாக மாற்றலாம். ஆசிரியர்கள் தங்கள் சேவையை மனமுவந்து ஆற்ற வேண்டும். இத்திட்டம் முழுமையாக வெற்றியடைய ஆசிரியர்கள் முழுப்பொறுப்பேற்று, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் அயராமல் பணியாற்றிட வேண்டும்.

அனைத்து மாணவர்களில் கற்றல் திறனும் ஒரே அளவில் இருக்காது. எனவே, மாணவர்களின் திறனுக்கேற்றவாறு அவர்களுக்கு கல்வி கற்பித்து திறமை மிக்க மாணவர்களை உருவாக்க வேண்டும். மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த, இத்திட்டம் முழுமையாக வெற்றியடைய ஆசிரியர்கள் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர்.ஸ்ரீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.சீ.கருப்புச்சாமி வரவேற்றார்கள். இல்லம் தேடி கல்வித்திட்டம் மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர் திரு.ரத்னவிஜயன் இத்திட்டம் குறித்து பயிற்சி அளித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித்திட்ட அலுவலர் திரு.த.ஜான்பிரிட்டோ, திண்டுக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் திருமதி அ.மாரிமீனாள், மாவட்ட அளவிலான குழு உறுப்பினர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.