Close

Illam thedi kalvi scheme

Publish Date : 22/11/2021

செ.வெ.எண்:-53/2021

நாள்:20.11.2021

பள்ளிக் கல்வித் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் “இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில்” சேர தன்னார்வலர்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் “இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில்” தன்னார்வலர்கள் பதிவு நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் புறநகர் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மொத்தம் 3,681 குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. இந்த குடியிருப்புப் பகுதிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவஃமாணவியரின் எண்ணிக்கையின் அடிப்படையில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்திற்காக உத்தேசமாக 5,100 தன்னார்வலர்கள் கற்பித்தல் பணிகளுக்காக தேவை என கண்டறியப்பட்டுள்ளது.

தன்னார்வலர்கள் பதிவு செய்வதற்காக தனி இணையதளமும் illamthedikalvi.tnschools.gov.in துவங்கப்பட்டுள்ளது. அந்த இணையதளம் வாயிலாக தன்னார்வலர்கள் பதிவு செய்து வருகின்றனர். தன்னார்வலர்கள் 1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதைப்போலவே 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதியாக இளங்கலைப் பட்டப்படிப்பு (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளதை உறுதி செய்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆத்தூர், வத்தலக்குண்டு, திண்டுக்கல் புறநகர், குஜிலியம்பாறை, கொடைக்கானல், நத்தம், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி புறநகர், ரெட்டியார்சத்திரம், சாணார்பட்டி, தொப்பம்பட்டி, வடமதுரை மற்றும் வேடசந்தூர் ஒன்றியங்களைச் சார்ந்த குடியிருப்பு பகுதிகளில் உள்ள இளைஞர்கள், பட்டதாரிகள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தன்னார்வலர்களாக பதிவு செய்யலாம். அத்துடன், தன்னார்வலர்கள் பதிவு செய்வதை, உள்ளாட்சி அமைப்புகள், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.