Close

Jallikattu-Kosavapatty-Nallamanaikenpatti

Publish Date : 05/02/2024

செ.வெ.எண்:-07/2024

நாள்:02.02.2024

திண்டுக்கல் மாவட்டம்

கொசவப்பட்டி மற்றும் நல்லமநாயக்கன்பட்டி கிராமங்களில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் இணையதளம் வாயிலாக பெயர் பதிவு செய்திட வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அறிவிக்கையின்படி ஜல்லிக்கட்டு நடத்த தகுதி பெற்ற கிராமங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் அதற்கான இணையதள முகவரியான https://dindigul.nic.in என்ற இணையதளத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்திட வேண்டும்.

திண்டுக்கல் கிழக்கு வட்டம், கொசவபட்டி கிராமத்தில் 09.02.2024 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் கேட்கப்பட்டுள்ள விபரங்களுடன் இணையதளம் வாயிலாக 06.02.2024-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்திட வேண்டும்.

அதேபோல், திண்டுக்கல் கிழக்கு வட்டம், நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் 12.02.2024 (திங்கட்கிழமை) அன்று நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் கேட்கப்பட்டுள்ள விபரங்களுடன் இணையதளம் வாயிலாக 05.02.2024-ம் தேதி முதல் 09.02.2024-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்திட வேண்டும்.

ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் இணையதளத்தில் தங்களது கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம், வயதிற்கான சான்றிதழ், முதலானவற்றை பதிவேற்றம் செய்திட வேண்டும். அதேபோல், ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் காளைகளுக்கான பதிவுகளையும் காளையின் உரிமையாளர்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.

பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்ட பின்னர் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் விதிகளின்படி டோக்கன் பதிவிறக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டு, டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அனுமதிச் சீட்டு இணையதளம் மூலமாகவே அவர்களுக்கு வழங்கப்படும். உரிய விபரங்கள் இடம்பெறாத பதிவுகள் நிராகரிக்கப்படும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.