Close

Jamabanthi-Final day – Dindigul west Taluk

Publish Date : 08/06/2022
.

செ.வெ.எண்:-20/2022

நாள்:07.06.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் வட்டாட்சியர்(மேற்கு) அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம் இறுதி நாளான இன்று(07.06.2022) வருவாய் தீர்வாய அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல் ஆணைகளை வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 1431-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 01.06.2022 அன்று தொடங்கி அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இறுதி நாளாக இன்று(07.06.2022) நடைபெற்ற வருவாய் தீர்வாயம்(ஜமாபந்தி) பணிகளை வருவாய் தீர்வாய அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப. அவர்கள் வருவாய் கணக்கு பதிவுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இன்றைய தினம், திண்டுக்கல் (மேற்கு) குறுவட்டத்திற்குட்பட்ட அகரம், தாடிக்கொம்பு, அணைப்பட்டி, பள்ளப்பட்டி, குரும்பபட்டி, செட்டிநாயக்கன்பட்டி, அலக்குவார்பட்டி, சீலப்படி ஆகிய 8 வருவாய் கிராமங்களுக்கான பதிவேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இன்றையதினம் மட்டும் 276 மனுக்கள் பெறப்பட்டன. திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் கடந்த சில தினங்களாக நடைபெற்ற வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சியில் ரெட்டியார்சத்திரம் குறுவட்டத்தில் 71 மனுக்கள், பலக்கனூத்து குறுவட்டத்தில் 74 மனுக்கள், தருமத்துப்பட்டி குறுவட்டத்தில் 87 மனுக்கள், திண்டுக்கல்(மேற்கு) குறுவட்டத்தில் 276 மனுக்கள் என மொத்தம் 508 மனுக்கள் பெறப்பட்டன. மேலும், வருவாய் தீர்வாய நிகழ்ச்சி அறிவிப்பின்போது, கிராம மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கையின்படி, 3 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை, 10 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள், 5 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டா, 3 நபர்களுக்கு பட்டா மாறுதல் ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது ஒரு வாரத்திற்குள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அனைத்து மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணவும், தீர்வு காணப்படாத மனுக்கள் விபரம் மற்றும் அவை என்ன காரணத்தினால் நிறைவேற்ற இயலவில்லை என்ற தெளிவான காரணமும் அளிக்க வேண்டும். முறையான காரணமின்றி எந்த மனுவை தள்ளுபடி செய்யக்கூடாது என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எத்தனை மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன, எத்தனை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன, நிலுவையில் உள்ள மனுக்கள் விபரம் குறித்து அறிக்கை அனுப்ப சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.இரா.அமர்நாத், மாவட்ட ஆட்சியரின் அலுவலக மேலாளர்(பொது) திரு.தசரதவரதன், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.ரமேஷ்பாபு, தனி வட்டாட்சியர்(ச.பா.தி.) திருமதி மீனாதேவி, துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.