Jamabhandhi – Oddanchatram Taluk Office – GH Inspection

செ.வெ.எண்:-47/2023
நாள்:-25.05.2023
திண்டுக்கல் மாவட்டம்
ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1432-ஆம் பசலி வருவாய் தீர்வாயத்தில் 17 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வருவாய் தீர்வாய அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 1432-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் 24.05.2023 அன்று தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2ம் நாளாக இன்று(25.05.2023) நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 17 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வருவாய் தீர்வாய அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
1432-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் 24.05.2023 முதல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வருவாய் தீர்வாயத்தின்போது பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் மற்றும் வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பொதுமக்கள் நலன் சார்ந்த பிரச்னைகள் ஆகியவற்றிற்கு குறிப்பிட்ட காலத்திற்குள் தகுதியுடைய அனைத்து மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வு காண சம்மந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி, இன்றைய தினம், ஒட்டன்சத்திரம் வட்டம், சின்னக்காம்பட்டி குறுவட்டத்திற்குட்பட்ட எம்.அத்தப்பம்பட்டி, நவக்காணி, மண்டவாடி தொகுப்பு, அம்பிளிக்கை, சிந்தலப்பட்டி தொகுப்பு, காப்பிளியப்பட்டி ஆகிய 6 வருவாய் கிராமங்களுக்கான பதிவேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும், வருவாய் தீர்வாய நிகழ்ச்சி அறிவிப்பின்போது, கிராம மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கையின்படி, 17 மனுதாரர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
முன்னதாக, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், அரசு தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் கட்டுமான பணிகளை பார்வையிட்டு, மருத்துவமனையின் பதிவேடுகள் மற்றும் உள்நோயாளிகளிடம் மருத்துவ சேவை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், விருப்பாட்சியில் உள்ள நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி, வட்டாட்சியர் திரு.முத்துச்சாமி, உதவி இயக்குநர் (நிலஅளவை) திரு.சிவக்குமார், வட்டாட்சியர்(சமூக பாதுகாப்புத்திட்டம்) திரு.சசி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் திரு.பாண்டியராஜன் மற்றும் தொடர்புடைய பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.