Kalai Thiruvila – Schools
செ.வெ.எண்:-49/2022
நாள்:22.11.2022
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் கலைத்திருவிழா நாளை(23.11.2022) முதல் நடைபெறுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள், 2022-23ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத் தொடரில் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது, “மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் இலட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா நடத்தப்படும்” என அறிவிப்பினை அறிவுத்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி, மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாகவும், பள்ளிக் கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்தின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகளும் 6 முதல் 12 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு 23.11.2022 முதல் கலைத் திருவிழா போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.
அதன்படி, கீழ்க்காணும் பிரிவுகளின்படி கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படுகிறது
பிரிவு 1 : 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை,
பிரிவு 2 : 9 மற்றும் 10 ஆம் வகுப்பு
பிரிவு 3 : 11 மற்றும் 12 ஆம் வகுப்பு
பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர்களை வட்டார அளவிலும், வட்டார அளவில் முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெறும் மாணவர்களை மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளிலும் பங்கேற்கச் செய்ய வேண்டும்.
மாநில அளவிலான கலைத் திருவிழா இறுதி போட்டிகள் ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் மற்றும் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும் தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தரவரிசையில் முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.
கீழ்க்காணும் அட்டவணையின்படி கலைத்திருவிழா போட்டிகள் நாளை(23.11.2022) முதல் நடைபெறுகிறது
பள்ளி அளவில் -23.11.2022 முதல் 28.11.2022க்குள்
வட்டார அளவில் -29.11.2022 முதல் 05.12.2022க்குள்
மாவட்ட அளவில் -06.12.2022 முதல் 10.12.2022க்குள்
மாநில அளவில் -03.01.2022 முதல் 09.01.2023க்குள்
ஆகவே, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் கலைத் திருவிழா போட்டிகளில் பெருமளவு மாணவர்களின் பங்கேற்பினை உறுதி செய்ய அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து கல்வி அலுவலர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.