Close

Kalaignar scheme inaugurated by The Hon’ble Food minister

Publish Date : 25/10/2021
.

.

.

செ.வெ.எண்:-48/2021

நாள்:23.10.2021

தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேட்டுப்பட்டியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்-மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் இன்று துவக்கி வைத்தார்கள்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை, திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேட்டுப்பட்டியில் இன்று(23.10.2021) துவக்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள் பொறுப்பேற்றவுடன், தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்கள். கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு காலத்தில் நிவாரணமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000, நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வசதி என பல்வேறு திட்டங்களை பொதுமக்களுக்காக செயல்படுத்தி வருகிறார்கள். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு செலவில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ‘உங்கள் தொகுதியில் மாண்புமிகு முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள, அதற்கான தனி அதிகாரியை நியமித்து, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள் தேர்தல் நேரத்தில் சொன்ன 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு, எஞ்சிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேறியதோடு மட்டுமல்லாமல், கொரோனா நிவாரணமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகைப்பொருட்கள் வழங்கப்பட்டன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, இந்தியாவிலேயே முதல் முறையாக தமிகத்தில்தான் வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சி காலத்தில்தான் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அந்த வகையில், தற்போது மகளிருக்கு கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை தங்க நகை கடன் தள்ளுடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். இதன்மூலம் 11 லட்சம் மகளிர் பயன்பெறுவார்கள்.

மேலும், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும், தங்கள் தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு ஊராட்சிக்கும் மாதம்தோறும் சென்று, அங்குள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து, அவர்களின் தேவைகளை கேட்டறிந்து, அவற்றை நிறைவேற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள் அறிவுறுத்தி, அதற்காக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்கள்.

13 துறைகளின் செயல் திட்டங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, அதன்பேரில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றி, பயிர் சாகுபடி பரப்பினை அதிகரித்து, விவசாயிகள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேட்டுப்பட்டியில் இன்று கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்கள்.

அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மரிச்சிலம்பு ஊராட்சி, பூலாம்பட்டியில் பால் குளிர்விப்பு மையத்தை திறந்து வைத்து தெரிவித்ததாவது:-

தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மரிசிலம்பு ஊராட்சி, பூலாம்பட்டியில், ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட, 2 பால் குளிர்விப்பு மையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தப்பகுதியில் குடிநீர், சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில், கிராம ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள ஊரக வளர்ச்சித்துறையிடம் இருந்து ரூ.2.28 கோடி சிறப்பு நிதி பெறப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் குடிநீர் தேவையை நிறைவேற்ற ரூ.630 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. அது தற்போது, ரூ.950 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த திட்டம் விரைவில் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் ஒரு நபருக்கு தினமும் 55 லிட்டர் தண்ணீர் வழங்க முடியும். ஒட்டன்சத்திரம் தொகுதியில் பல்வேறு இடங்களில் துணை மின் நிலையங்கள், சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. விவசாய விளைபொருட்களை பாதுகாக்க ஒட்டன்சத்திரத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் குளிர்சாதன வசதியுடன் குடோன் அமைக்கப்படவுள்ளது. பரப்பலாறு அணை தூர்வார அனுமதி வழங்கப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட 21 கல்லூரிகளில், 2 கல்லூரிகள் ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு கிடைத்துள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள் தலைமையில் தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெற்று வருகிறது. அதனால்தான், 5 மாதகால ஆட்சியின் மீது நம்பிக்கை வைத்து, உள்ளாட்சி தேர்தலில் அதிக வெற்றியை அளித்து, பொதுமக்கள் கழக ஆட்சிக்கு அங்கீகாரம் அளித்துள்ளார்கள் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊராட்சித்துணைத் தலைவர் திரு.கா.பொன்ராஜ், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி ஆர்.சத்தியபுவனா, துணைத்தலைவர் திரு.பி.சி.தங்கம், வேளாண்மை இணை இயக்குநர் திரு.எஸ்.பாண்டித்துரை, மாவட்ட ஆவின் பொது மேலாளர் திரு.தியானேஷ்பாபு, ஆவின் மேலாளர் திரு.உதயநிதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.எஸ்.கிருஷ்ணசாமி, ஊராட்சிக் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் திரு.மோகன்குமார், திரு.முருகன், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் திரு.செந்தில்நாதன், செயலாளர் திரு.கந்தசாமி, மேட்டுப்பட்டி ஊராட்சி தலைவர் திரு.பெரியசாமி, மரிசிலம்பு ஊராட்சித்தலைவர் திரு.சுப்பிரமணி மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.