Close

Kalaignarin Varumun kappom scheme

Publish Date : 12/10/2021
.

செ.வெ.எண்:-26/2021

நாள்:12.10.2021

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மருத்துவ முகாமை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி, ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் – ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றியம், முருநெல்லிக்கோட்டை ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட சுள்ளெறும்பு அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஏழை, எளியோர் வசிக்கும் இடத்திலேயே சிறப்பு மருத்துவச் சேவை அளிக்கும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை 29.09.2021 அன்று சேலம் மாவட்டம், வாழப்பாடியில் தொடங்கி வைத்தார்கள். தமிழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஆண்டுக்கு 1,250 மருத்துவ முகாம்கள் “கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்” மூலம் மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் உள்ள மக்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைவார்கள்.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றியம், முருநெல்லிக்கோட்டை ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட சுள்ளெறும்பு அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று(12.10.2021) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மருத்துவ முகாமை துவக்கி வைத்து, 5 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழக அரசு, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு வீடு தேடி சிகிச்சை அளிப்பதோடு, மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் தடுப்பு பணியில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது ஏழை, எளியோர் வசிக்கும் இடத்திலேயே சிறப்பு மருத்துவச் சேவை அளிக்கும் வகையில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ சிகிச்சை எளிதில் கிடைக்கச் செய்தல், நோய்களுக்கான பரிசோதனை மற்றும் உடல் நலம் குறித்த ஆலோசனை வழங்குதல், அதிநவீன பரிசோதனை சாதனங்களால் நோய்களை கண்டறிதல், நோய் கண்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்தல், சுகாதார விழிப்புணர்வு கல்வி வாயிலாக உடல் நல மேம்பாடு மற்றும் தனிநபர் ஆரோக்கியத்தை உருவாக்குதல் போன்றவை கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் நோக்கமாகும்.

ஏழை, எளிய மக்கள் தங்களுக்கு நோய் ஏற்பட்டு, அதனை சரி செய்வதற்காக மட்டுமே மருத்துவர்களையும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களையும் நாடிச் செல்கின்றனர். நோய்கள் வருமுன் அதனை தடுக்கும் அணுகுமுறை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கிட, கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மருத்துவ முகாமில், இதயநோய், மகப்பேறு, சிறுநீரகம், பல், கண், தோல்;, காது, மூக்கு, தொண்டை, எலும்பு மூட்டு மற்றும் மனநல மருத்துவம் ஆகிய 10 துறை சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு பொருமக்களுக்கு பரிசோதனை செய்து, நோயை கண்டறிந்து, உயர் சிகிச்சை தேவைப்படுவோர் சிகிச்சைக்காக, மேல் அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. பொதுமக்களை பரிசோதித்து நோய்களை முதலிலேயே கண்டறிந்து, அதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவது இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாகும். நோய் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுவதால் நோயின் பரவல் உடலில் பெருமளவில் இருக்காது. எனவே, பொதுமக்கள் அனைவரும், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் நடத்தப்படவுள்ள மருத்துவ முகாமிகளில், இரத்தம்(எச்.பி.) அளவு, இரத்த அழுத்த பரிசோதனை, இரத்த சர்க்கரை அளவு, இரத்த கொழுப்பு அளவீடு, மலேரியா இரத்தத் தடவல், இ.சி.ஜி., கர்ப்ப வாய் புற்று நோய் பரிசோதனை, ஸ்கேன், கண்புரை அளவு, கொரோனா தடுப்பூசி செலுத்துதல், கொரோனா சளி பரிசோதனை மற்றும் தடுப்பு அறிவுரைகள், டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில், ஊராட்சி ஒன்றியத்திற்கு மூன்று வீதம் 42 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அரசு மருத்துவர்களுடன் இந்திய மருத்துவ சங்கம், ரோட்டரி, அரிமா சங்கங்கள் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இந்த கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் இணைந்து செயலாற்றுவார்கள்.

பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 90 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. மீதமுள்ளவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இறந்த 19 நபர்களில் 17 நபர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் ஆவர். மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்தியும், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டால், பெரிய அளவில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு இன்றி பாதுகாத்துக்கொள்ளலாம். எனவே, அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திருமதி ம.காசிசெல்வி, துணை இயக்குநர்(சுகாதாரப்பணிகள்) மரு.மு.வரதராஜன், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திரு.ப.க.சிவகுருசாமி, துணைத்தலைவர் திருமதி டி.ராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி பா.விஜயலட்சுமி, திரு.கோ.வேதா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திருமதி எஸ்.சுப்புலட்சுமி சண்முகவேல், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் திருமதி காளீஸ்வரி மலைச்சாமி, முருநெல்லிக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் திரு.சின்னு என்ற வி.முருகன், குருந்தநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திரு.பழனிச்சாமி, முன்னாள் ஊராட்சி ஒன்றியத்தலைவர் திரு.கே.சத்தியமூர்த்தி, திரு.எஸ்.மணி மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.