Close

Kalaingnar -Decorated Vehicle”முத்தமிழ்த்தேர்”

Publish Date : 21/11/2023
.

செ.வெ.எண்:-48/2023

நாள்: 20.11.2023

திண்டுக்கல் மாவட்டம்

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, “எழுத்தாளர் – கலைஞர்” கலைஞரின் பேனா பொருத்தப்பட்ட “முத்தமிழ்தேர்” அலங்கார ஊர்தியினை மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் வரவேற்று, கலைஞரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, புகைப்படத் தொகுப்பினை பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைத்தனர்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, “எழுத்தாளர் கலைஞர்” கலைஞரின் பேனா பொருத்தப்பட்ட “முத்தமிழ்தேர்” அலங்கார ஊர்தியினை மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் இன்று(20.11.2023) வரவேற்று, கலைஞரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, புகைப்படத் தொகுப்பினை பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைத்து, மாணவ, மாணவிகளுக்கு பேனா வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:-

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், தமிழர் மாண்பின் மரியாதை சின்னமாக, தமிழக மக்களின் மனதில் என்றென்றும் வீற்றிருக்கிறார். தமிழகம் உருவாவதற்கும், தாய்மொழியாம் தமிழுக்கு பெருமை சேர்த்தவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆவார். அவருடைய நுாற்றாண்டு விழாவினை இன்று நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நுாற்றாண்டு விழாவினை தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் கடந்த ஜுன் 3ம் தேதி முதல் வரும் 2024-ஆம் ஆண்டு ஜுன் 3-ஆம் தேதி வரை ஓராண்டு சிறப்பாக கொண்டாட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ததன் அடிப்படையில் இந்த விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா, அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு நிலையான பங்களிப்பைத் தரவேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட வேண்டும் என்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டன.

அதில், “எழுத்தாளர்-கலைஞர்” குழு, படைப்புலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரது பரிமாணங்களைப் போற்றும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை செயல்படுத்தி வருகிறது.

அந்தவகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழுக்கு, மேலும் புகழ் சேர்க்கும் வகையில் இன்றைய இளம் தலைமுறையினருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பன்முகத்தன்மையினை எடுத்து செல்லும் வகையில், எழுத்தாளர் – கலைஞர் குழுவின் மூலம் அவரது புகழ்பாடும் ”முத்தமிழ்த்தேர்” அலங்கார ஊர்தி தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த அலங்கார ஊர்தி 04.11.2023 அன்று கன்னியாகுமரி, காந்தி மண்டபம் அருகில் உள்ள முக்கோணப்பூங்காவில் இருந்து மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரிய கருப்பன் அவர்களால் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோதங்கராஜ் அவர்கள், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி.என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் ஆகியோரால் துவக்கி வைக்கப்பட்டது.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பன்முக ஆற்றலையும், அவர் தமிழ் சமூகத்திற்கு படைத்தளித்த மக்கள் நலத் திட்டங்களையும் தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லும் வகையில் ”முத்தமிழ்த்தேர்” என்ற அலங்கார ஊர்தி கன்னியாகுமரியைத் தொடர்ந்து, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை, இராமநாதபுரம், புதுகோட்டை, சிவகங்கை, நகப்பட்டினம், மயிலாடுதுரை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் காட்சிப்படுத்தப்பட்டு இன்றைய தினம்(20.11.2023) திண்டுக்கல்லில் காட்சிப்படுத்தப்பட்டவுள்ளது. தொடர்ந்து இந்த முத்தமிழ்த்தேர் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் காட்சிப்படுத்தப்பட்டு 04.12.2023 அன்று சென்னை சென்றடையவுள்ளது.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், எல்லா துறைகளிலும் முத்திரை பதித்தவர். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ரூ.7000 கோடி விவசாய கடன் தள்ளுபடி வழங்கியவர். பத்திரிகையாளர்கள் பாசத்துடன் பார்த்து நேசக்கரம் நீட்டியவர். பத்திரிகைாயளர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்து, இலவச வீடுகள் கட்டிக் கொடுத்தவர்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். அந்த வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 6 முதல் 12 –ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழக்கும் புதுமைப் பெண் திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் ஆணைமுடி அணை, மருதாநதி அணை, சின்னகொம்பையாறு, பெரியகொம்பையாறு அணைகள், நங்காஞ்சியாறு, பரப்பலாறு, பாலாறு, குதிரையாறு என ஏராளமான அணைகள் கட்டி நீர்வளத்துறையில் முத்திரை பதித்துள்ளார். அவருடைய நினைவுகள் என்றும் நிலைத்து நிற்கும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நினைவுச்சின்னங்கள் அமைக்கப்படும்.

பெண்கள் கல்வியில் மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக திண்டுக்கல் மற்றும் நிலக்கோட்டை பகுதிகளில் பெண்கள் கல்லுாரிகளை உருவாக்கியவர். அந்த வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற 15 மாதங்களில் திண்டுக்கல் மாவட்டத்தில்க 5 கல்லுாரிகளுக்கு அனுமதி அளித்துள்ளார்.

அரசின் நலத்திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார். அவருக்கு என்றென்றும் உருதுணையாக இருக்க வேண்டும், என மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:-

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், 5 முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து, தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிற்கே முன்னோடியாக விவசாயம், வணிகம் என அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்தவர். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நுாற்றாண்டு விழா கடந்த ஜுன் 3-ஆம் தேதி தொடங்கி 2024-ஆம் ஆண்டு ஜுன் 3-ஆம் தேதி வரை ஓராண்டு கொண்டாடப்படுகிறது.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் பன்முகத்தன்மை கொண்டவர். இன்றைய இளம் தலைமுறையினருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பன்முகத்தன்மையினை எடுத்து செல்லும் வகையில், எழுத்தாளர் – கலைஞர் குழுவின் மூலம் அவரது புகழ்பாடும் ”முத்தமிழ்த்தேர்” அலங்கார ஊர்தி தயார் செய்யப்பட்டுள்ளது.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நுாற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அகில இந்திய அளவில் கட்சித் தலைவர்களை வரவழைத்து சென்னையில் பொதுக்கூட்டம் நடத்தினார். கலைஞர் நுாற்றாண்டு விழாவினை முன்னிட்டு கிண்டியில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் “கலைஞர் கோட்டம்” உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரையில் ரூ.205 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நுாற்றாண்டு நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், சிறந்த எழுத்தாளர், கதை வசனம் எழுதியுள்ளார், நுால்கள், நாவல்கள் எழுதி பன்முகத்தன்மை கொண்டவருக்கு, சிறப்பு சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள “முத்தமிழ் தேர்” திண்டுக்கல் வருகை தந்துள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 30 மாத கால ஆட்சியில், தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி, விவசாயிகள், வர்த்தகர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து மக்களையும் அரசின் திட்டங்கள் சென்றடையும் வகையில் பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார். அவருக்கு நாம் என்றென்றும் ஆதரவு அளிக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இவ்விழாவில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ப.வேலுச்சாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு. இ.பெ.செந்தில்குமார், வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் திரு. ச.காந்திராஜன், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ், மாவட்ட ஊராட்சித்தலைவர் திரு. மு.பாஸ்கரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ.பாஸ்கரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, மாவட்ட வன அலுவலர் திரு.ராஜ்குமார், இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக்முகையதீன், திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் திரு. எஸ்.ராஜப்பா, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.