Close

Kannivadi & Chinnalapatti Vallaikappu Function

Publish Date : 18/10/2021
.

..

செ.வெ.எண்:-35/2021

நாள்:18.10.2021

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள்
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத் துறையின் சார்பில், கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீர்வரிசை பொருட்களை வழங்கி சமுதாய வளைகாப்பு விழாவை
தொடங்கி வைத்தார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி பேரூராட்சி திருமண மண்டபம் மற்றும் சின்னாளபட்டி பேரூராட்சி விஜய் மஹாலில் இன்று (18.10.2021) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்துறையின் சார்பில், கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீர்வரிசை பொருட்களை வழங்கி சமுதாய வளைகாப்பு விழாவை தொடங்கி வைத்து, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழகத்தில் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் பெண்களை மையப்படுத்தியே அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், ஒவ்வொரு பெண்களும் ஏதாவது ஒரு மக்கள் நலத்திட்டத்தில் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்களின் நல வாழ்வில் மிகுந்த அக்கறை கொண்ட தமிழக அரசு, திருமண நிதியுதவித்திட்டம், உயர்த்தப்பட்ட மகப்பேறு நிதியுதவித்திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கான பராமரிப்பு நிதியுதவித்திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் பெண்களுக்காக செயல்படுத்தி வருகிறது.

சமுதாயத்தில் வாழும் அனைத்து மக்களும் சரிசமமாக இருக்கும் வகையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி அரசின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஆண்களைப்போல சொத்துரிமை பெண்களுக்கும் சரிசமமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் சட்டம் இயற்றியதன் மூலம் தற்போது செயல்படுத்தபட்டு வருகிறது. 1928ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள் வைத்த கோரிக்கையை, 1989ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றினார்கள். அதேபோல் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், 8ஆம் வகுப்பு படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகை ரூ.5,000 வழங்கும் திட்டத்தையும், முதன்முதலில் வழங்கியது கலைஞரின் ஆட்சிக் காலத்தில்தான். அதன்பிறகு இத்திட்டம் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, கல்லூரி படித்த பெண்களுக்கும் திருமண உதவித் தொகைகள் உயர்த்தப்பட்டு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதன்முதலில் தொடங்கி வைத்தார்கள். உள்ளாட்சித் தேர்தலில் பெண்களும் அதிகளவில் போட்டியிடும் வகையில், 33 சதவீதம் இட ஒதுக்கீடும், அரசாங்க வேலைகளில் பெண்களுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடும் வழங்கியது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில்தான், தற்போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அரசு பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டினை 40 சதவீதமாக உயர்த்தியுள்ளார்கள். இந்த அரசு திட்டங்களால் பயன்பெறும் பெண்கள் தங்களையும், தனது குடும்பத்தாரையும் சுயமாக காப்பாற்றிக்கொள்ள முடியும். பெண்கள் சம உரிமை பெற்று தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.

மேலும், முதன்முதலாக மகளிர் சுய உதவிக் குழுக்களை மாண்புமிகு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் துவக்கி வைத்தார்கள். இத்திட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது தமிழகம் முழுவதும் சென்று அனைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் காசோலைகளை வழங்கினார். பெண்கள் எல்லா விதத்திலும், சுயமரியாதை பெறும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்கள். நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை செயல்படுத்தி, வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு உதவியுள்ளார்கள். கர்ப்பிணி தாய்மார்கள் தனது உடலையும், மனதையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது குழந்தை ஆரோக்கியமாக பிறப்பதற்கு உறுதுணையாக இருக்கும். கர்ப்பிணி தாய்மார்கள் தங்களது குழந்தைகளை சிறந்த முறையில் கல்வி பயில வைக்கவேண்டும். கல்வியின் மூலமே பல்வேறு வளர்ச்சிகளை அடைவதற்கு வாய்ப்பாக அமையும். எனவே, அரசின் நலத்திட்ட உதவிகளை பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்கள்.

மேலும், இன்றைய தினம் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவின் மூலமாக, திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி பேரூராட்சி திருமண மண்பத்தில் 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கும், சின்னாளபட்டி பேரூராட்சி விஜய் மஹாலில் 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கும் என மொத்தம் 400 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. கன்னிவாடி பொது மக்கள் அனைத்து பேருந்து வழிதடங்களுக்கும் சென்று வர ஏதுவாக, நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கவும், தோனிமலைக்கு செல்லும் சாலை வழிதடங்களை சீரமைத்து, பேருந்து வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழச்சியில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி அவர்கள், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திருமதி ம.காசிசெல்வி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி ச.பூங்கொடி, மாவட்ட ஊராட்சித்தலைவர் திரு.மு.பாஸ்கரன், திண்டுக்கல் (மேற்கு) வட்டாட்சியர் திரு.வடிவேல்முருகன், ஆத்தூர் வட்டாட்சியர் திரு.ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.