KMUT-2nd Phase Palani – Inaguration

செ.வெ.எண்:-31/2023
நாள்: 10.11.2023
திண்டுக்கல் மாவட்டம்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இரண்டாம் கட்டமாக பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு வங்கி பற்று அட்டையினை பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் கூடுதலாக இணைந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் பணியை சென்னையில் இன்று(10.11.2023) தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நடைபெற்ற விழாவில் பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி ஆகியோர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், குடும்பத்தலைவிகளுக்கு வங்கி பற்று அட்டையினை இன்று(10.11.2023) வழங்கினார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக்முகையதீன் தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் பேசியதாவது:-
பிரதிபலன் எதிர்பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும், பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாகவும், வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் வாழ்வதற்கு பெண்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்காக “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்“ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 15.09.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்படும் திட்டங்களில் ஒரு வரலாற்று திட்டமாகவும், இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் முன்னோடி திட்டமாகவும், பெண்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் வகையிலும், பொருளாதார நிலையை மேம்படுத்திடும் வகையில் குடும்பத்தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தமிழகத்தில் 1.06 கோடி மகளிர் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தில், தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 அவரவர் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது.
பழனி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 66,934 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அதில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் உதவித்தொகை கோரி 47,697 நபர்கள் விண்ணப்பித்தனர். அதில் முதல்கட்டமாக 35,022 குடும்பத் தலைவிகள் இத்திட்டத்தில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் விடுபட்டவர்களில், தகுதியுடையவர்கள் மேல்முறையீட்டு மனுக்கள் 3,077 பெறப்பட்டதில், கள ஆய்வுக்குப் பின்னர் 1,878 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இன்று(10.11.2023) முதல் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்குவதற்கான வங்கி பற்று அட்டை வழங்கப்பட்டுள்ளது.
பெண்கள் தங்கள் சுயதேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் பொருட்டும், அன்றாட பயணச் செலவுகளை தவிர்த்திடும் வகையில் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத் திட்டத்தினை ஏற்படுத்தியுள்ளார்கள். இதன்மூலம் மகளிருக்கு சேமிப்பு ஏற்படுகிறது.
மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால், இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தொடங்கி வைக்கப்பட்டது. கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், கூட்டாக இணைந்து சுயதொழில் புரிவதற்காக மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு மானியக்கடனுதவி, சுழல் நிதி வழங்கப்படுகிறது.
சுமார் 31 ஆயிரம் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை சிற்றுண்டித் திட்டம் மிகமுக்கியமானது. சுமார் 17 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர். பெண்களுடைய சிரமத்தை குறைக்கக் கூடியத் திட்டம் அது. காலையிலே எழுந்து வேலைக்கு செல்லக் கூடிய பெண்கள், தங்கள் குழந்தைகளுக்கு காலை உணவு செய்து தருவதில் உள்ள சிரமத்தை இந்த திட்டம் போக்கியிருக்கிறது.
இதுவரை அரசு நிறைவேற்றிய மகளிர் முன்னேற்றத் திட்டங்களிலேயே முதன்மையானது என்று சொல்லக் கூடிய திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம். இந்த திட்டம் மகளிருக்கான உதவித்தொகை அல்ல, உரிமைத்தொகையாகும். பெண்கள் கல்வியிலே, பொருளாதாரத்திலே உயர வேண்டும். அதேபோல் பொது வாழ்க்கையிலும் பெண்கள் அதிகமாக ஈடுபட வேண்டும். அப்போது தான் உங்களுக்கான உரிமைகளை நீங்கள் வலியுறுத்தி பெற முடியும். எந்த ஒரு அரசு திட்டத்தை செயல்படுத்தப்படுகிற போதும், மேல்முறையீடு செய்கிற வசதி இருக்காது. ஆனால், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை பொறுத்தவரை, விண்ணப்பம் ஏற்கபடாதவர்கள், மீண்டும் மேல்முறையீடு செய்கிற வசதியைச் செய்துள்ளோம். தகுதியுள்ள ஒரு மகளிர் கூட இந்த திட்டத்தில் இருந்து விடுபட்டு விடக் கூடாது என்ற எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறோம்.
பொருளாதாரத்தில் பெண்கள் வளர்வது நமது வீட்டிற்கும், சமுதாயத்திற்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும் மிகப்பெரிய பலனைத் தரும். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் ஒவ்வொரு வீட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பெரிய தூண்டுகோலாக அமையப் போகிறது.
வீட்டை விட்டு வெளியில் சென்று வேலை பார்ப்பவர்கள் தான் வேலை செய்கிறார்கள் என்று காலம் காலமாக இருந்து வருகிறது. இந்த சமுதாயத்திற்கு அடிப்படையான குடும்பத்தின் ஆணிவேராக இருப்பது பெண்கள்தான். குடும்பத்தை உயர்த்துவதற்கும், குழந்தைகள், கணவர்கள், குடும்ப உறுப்பினர்கள் என அனைவருக்காகவும் உழைக்கும் பெண்களுக்கு இந்தியாவிலேயே முதல் முதலாக அங்கீகாரம் கொடுத்தது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். இது உதவியாக இல்லாமல் இதை பெறுவதற்கு உங்களுக்கு உரிமை இருக்கின்றது. நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற கடமைக்கான உரிமையை நீங்கள் பெற்று இருக்கிறீர்கள். அதற்கான தொகை தான் இன்று உங்களுக்கு வழங்கப்படுகிறது.
மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் தமிழ்நாட்டிலே இருக்கக்கூடிய தேவைப்படக்கூடிய ஒவ்வொரு குடும்பத் தலைவியுடைய கரங்களிலும் அந்த உரிமை தொகையை சேர்ப்பது தான் இதனுடைய இலக்கு. தகுதியான எந்த ஒரு மகளிரும் விட்டுப் போய் விடக்கூடாது என்ற வகையில் இந்த துறையின் சார்பில் முழு முயற்சிகளை மேற்கொண்டு, இன்று உங்கள் கையிலே இந்த பற்று அட்டைகளை கிடைக்கச் செய்வதற்கு முழு காரணமாக இருப்பவர் நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். எனவே அவருக்கு என்றும் ஆதரவுடன் இருக்க வேண்டும், என பழனி சட்டமன்ற உறுப்பினர் பேசினார்.
இவ்விழாவில், பழனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி ஈஸ்வரி கருப்பசாமி, பழனி நகர்மன்ற தலைவர் திருமதி உமா மகேஸ்வரி, பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சௌ.சரவணன், ஆயக்குடி பேரூராட்சித் தலைவர் திருமதி மேனகா, பாலசமுத்திரம் பேரூராட்சித் தலைவர் திருமதி பெ.ராஜராஜேஸ்வரி, நெய்காரப்பட்டி பேரூராட்சித் தலைவர் திருமதி கா.கருப்பாத்தாள், பழனி வருவாய் வட்டாட்சியர் திரு.பழனிச்சாமி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.