Close

Kodaganar Dam – Collector Inspection

Publish Date : 10/11/2021
.

.

.செ.வெ.எண்:-17/2021

நாள்:09.11.2021

மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், வேடசந்தூர் வட்டம், அழகபுரி கிராமம், குடகனாறு அணைக்கட்டு பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (09.11.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர்.சீனிவாசன்,இ.கா.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், அழகபுரி கிராமம் குடகனாறு அணைக்கட்டு பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

இந்த ஆய்விற்குபின் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை பொழிவு சராசரியை காட்டிலும், 25 சதவீகிதத்திற்கு மேல் கூடுதலாக பெய்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளை காட்டிலும், இந்த ஆண்டு மழை பொழிவு நல்ல முறையில் இருக்கின்ற காரணத்தினால், மாவட்டத்தில் பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகிறது. அதனால், பொதுமக்கள், குழந்தைகள் நீர்நிலைப்பகுதிகளில் துவைக்கவோ, குளிக்கவோ அருகில் செல்ல கூடாது என்ற முன்னறிவிப்பு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இன்று (09.11.2021) குடகனாறு அணையின் நீர் இருப்பு குறித்தும், ஆணையின் கதவுகள் உறுதி தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அணையில் உள்ள 10 கதவுகளை ரூ.7 கோடி மதிப்பீட்டில் பழுது பார்க்கப்பட்டுள்ளது. தற்போது, குடகனாறு அணையின் 10 கதவுகள் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை நேரில் ஆய்வு செய்யப்பட்டது. குடகனாறு அணையின் 10 கதவுகள் உறுதியாக உள்ளது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. குடகனாறு அணையை பொறுத்தவரையில், அணையின் முழு கொள்ளளவு 27 அடி ஆகும். இதில் தற்சமயம் 16 அடி தண்ணீர் நிரம்பி உள்ளது. தண்ணீர் 20 அடியை எட்டியதும், தமிழக அரசின் அனுமதி பெற்று, கால்வாய் திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மூலமாக, திண்டுக்கல் மாவட்டத்தில் 4500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். தற்சமயம் அணையின் கதவுகளில், ஏற்பட்டுள்ள சின்னச்சின்ன தண்ணீர் கசிவுகளை சரி செய்வதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால், அணைக்கு எந்தவிதமான பாதிப்பு ஏற்படாது. மேலும், பொதுப்பணித்துறையின் மூலமாக பழுதடைந்த பழைய கதவுகளை, பழுது நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

குடகனாறு அணையின் மூலமாக, வலதுபுற கால்வாய் வழியாக 7300 ஹெக்டர் நிலமும், இடதுபுற கால்வாய் வழியாக 1700 ஹெக்டர் நிலமும், என மொத்தம் 9000 ஹெக்டர் நிலம் பாசன வதிகள் பெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர்.சீனிவாசன்,இ.கா.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் அகரம் கிராமம், லெட்சுமணன்பட்டி அணைக்கட்டு பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

இந்த ஆய்வில், வேடசந்தூர் வட்டாட்சியர் திருமதி.மணிமொழி, செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) திரு.கு.கோபி, உதவி பொறியாளர் திரு.அ.முருகன் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.