Kodai festival – 2023 – Meeting – Kodaikanal

செ.வெ.எண்:-38/2023
நாள்:-23.05.2023
திண்டுக்கல் மாவட்டம், “கொடைக்கானல் கோடைவிழா-2023“ முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள்
தலைமையில் கொடைக்கானலில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் “கொடைக்கானல் கோடைவிழா-2023“ முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(23.05.2023) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடைவிழா-2023 மற்றும் 60-வது மலர்க்கண்காட்சி ஆகியவை மே 26-ஆம் தேதி தொடங்கி ஜுன் 2-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மலர்க்கண்காட்சி மே 26-ம் தேதி முதல் மே 28-ம் தேதி வரை 3 நாட்களும், கோடைவிழா கலைநிகழ்ச்சிகள் மே 26-ம் தேதி முதல் ஜுன் 2-ம் தேதி வரை 8 நாட்களும் நடைபெறவுள்ளன. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் இவ்விழாவில் தோட்டக்கலைத்துறை மூலமாக மலர்க்கண்காட்சியும், சுற்றுலாத்துறை மூலமாக கோடைவிழாவும் நடத்தப்படவுள்ளது. இவ்விழாவில் பல்வேறு பாரம்பரிய மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீர விளையாட்டுகள், படகு அலங்கார அணிவகுப்பு, மீன் பிடித்தல் போட்டி. நாய்கள் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
மலர்க்கண்காட்சியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சிறப்பான ஏற்பாடுகளை செய்திட வேண்டும். கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் சிறப்பாக நடத்த வேண்டும். காவல் துறையினர் போதிய பாதுகாப்பு ஏற்படுகளை மேற்கொள்ள வேண்டும். விழா நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், அதற்கான வழிமுறைகளை வகுத்து, முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள வேண்டும். சுற்றுலாப் பயணிகள் சிரமப்படாத வகையில் கொடைக்கானல் நகராட்சி சார்பில் குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பறை வசதிகள் ஏற்படுத்திட வேண்டும். சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவார்கள் என்பதால் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். மருத்துவக் குழுக்கள், 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், நடமாடும் மருத்துவக் குழு, நடமாடும் வாகன பழுது நீக்கும் குழு ஆகியவை தயார் நிலையில் இருத்தல் வேண்டும். தினமும் 2 முறை துப்புரவு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
பழனி, கெங்குவார்பட்டி வழியாக வரும் சுற்றுலா வாகனங்களில் வரும் பயணிகள் தடை செய்யப்பட்ட நெகிழி தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்துவதை தவிர்க்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து சுற்றுலா இடங்களிலும் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்திட வேண்டும்.
கொடைக்கானலுக்கு வழக்கமாக 50 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோடைவிழாவை முன்னிட்டு கூடுதலாக 25 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சுற்றுலாப் பயணிகளின் வருகையை பொறுத்து தேவைக்கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கோடைவிழாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் தங்கள் விருந்தினர் போல் கருதி அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து அனைத்துப் பணிகளையும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். கோடைவிழாவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி கொடைக்கானலுக்கு வருகை தரும் அனைவரும் மன நிறைவுடன் செல்லும் வகையில் கனிவுடன் செயலாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.இராஜா, கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் திரு.ப.சத்தியநாதன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் திருமதி சைனி, தோட்டக்கலை அலுவலர்(பிரையண்ட் பூங்கா) திரு.சிவபாலன், சுற்றுலா அலுவலர்(பொ) திருமதி த.சுதா, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கொடைக்கானல்) மேலாளர் திரு.இராதாகிருஷ்ணன், கொடைக்கானல் வட்டாட்சியர் திரு.அ.முத்துராமன், கொடைக்கானல் நகராட்சி பொறியாளர் திரு.முத்துக்குமார், காவல்துறை, சுகாதாரத்துறை, வனத்துறை, ஊரக வளர்ச்சி முகமை உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.