Close

KODAI FESTIVAL – Flower show-2025 inauguration

Publish Date : 26/05/2025
.

செ.வெ.எண்:-24/2025

நாள்:-24.05.2025

திண்டுக்கல் மாவட்டம்

கொடைக்கானலில் கோடைவிழா-2025 மற்றும் 62-வது மலர்க்கண்காட்சியை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோடைவிழா-2025 மற்றும் 62-வது மலர்க்கண்காட்சி தொடக்கவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(24.05.2025) நடைபெற்றது.

கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சியினை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விழாவில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக தலைவர் மரு.க.மணிவாசன், இ.ஆ.ப., அவர்கள், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் திரு.வி.தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர்(பொறுப்பு) திரு.பி.முருகேஷ், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

“மலைகளின் இளவரசி” என அழைக்கப்படும் கொடைக்கானல் தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த சுற்றுலா மலை வாசஸ்தலமாக விளங்குகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கோடைகாலத்தில் அதிக அளவில் கொடைக்கானலுக்கு வருகை தந்து சுற்றுலா இடங்களை கண்டுகளிக்கின்றனர்.

கோடைகாலத்தில் வருகை தரும் ஏராளமான சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், தமிழ்நாட்டின் பல்வேறு கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், உழைக்கும் மக்களின் சோர்வை போக்கும் வகையில், வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தவும், அந்நியச் செலாவணியை ஈட்டவும், பொருளாதார பரிமாற்றத்தை ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் மலர்க்கண்காட்சி மற்றும் கோடைவிழா தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு கோடை விழா-2025 மற்றும் 62-வது மலர்க்கண்காட்சி இன்று(24.05.2025) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விழா வரும் 01.06.2025-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

விழாவில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக தலைவர் மரு.க.மணிவாசன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுற்றுலாத்துறையின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த வாரம் ஊட்டியில் 127வது மலர்க்கண்காட்சியை தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மலர்க்கண்காட்சியை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து, கொடைக்கானலில் கோடைவிழா மற்றும் 62-வது மலர்க்கண்காட்சி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் 70,000 மலர்கள் பூத்துக்குலுங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. கொடைக்கானல் மலர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்பட்ட மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கோடை விழாவை காண சுமார் 1.5 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காய்கறிகளால் யானை போன்ற வன விலங்குகள் தத்ரூபமாக வடிமைக்கப்பட்டுள்ளன. ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில் சுற்றுலாப் பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, என தெரிவித்தார்.

விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஆண்டுதோறும் கோடைவிழா மற்றும் மலர்க்கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கோடைவிழா மற்றும் 62-வது மலர்கண்காட்சி இன்று(24.05.2025) தொடங்கி 01.06.2025 வரை நடைபெற உள்ளது.

மலர் கண்காட்சியை முன்னிட்டு பூங்காக்களில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் சால்வியா, டெல்பினியம், பிங்ஆஸ்டர்ஆர்னித்தோகேலம், கஜானியா, பென்ஸ்டீமன், வெர்பினா, கொரியாப்சிஸ் போன்ற மலர் செடிகளும், கொல்கத்தாவிலிருந்து வரவழைக்கப்பட்ட வீரிய ஒட்டு டேலியா மலர் நாற்றுக்கள் மற்றும் ஊட்டியிலிருந்து வரவழைக்கப்பட்ட லில்லியம் கிழங்குகள், வீரிய ஒட்டு மலர் நாற்றுக்கள் ஆன்டிரைனம், ஃபிளாக்ஸ் பேன்சி, மேரிகோல்டு, கேலண்டுல்லா, ஸ்டேட்டிஸ், டையாந்தஸ், ஜினியா, கலிஃபோர்னியா பாப்பி ஆகிய மலர்ச் செடிகள் இரண்டு மற்றும் மூன்று கட்டங்களாக நடவு செய்யப்பட்டு அனைவரின் மனதினை கவரும் வண்ணம் உள்ளது.

மலர்க்கண்காட்சியில் பிரையண்ட் பூங்கா தனித்துவமான பல இலட்சம் வண்ண மலர்களை கொண்ட மலர் படுக்கைகள், விலங்குகள் உருவ அமைப்புகள், காய்கறி மற்றும் பழங்களாலான உருவ சிற்பங்கள் கொண்டு அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்விக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில், சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் யானை சிற்பங்களுடன் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் வாசகங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன.

சுற்றுலாப்பயணிகளுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வாகன நிறுத்துமிடம், போக்குவரத்து வசதிகள், வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 24 மணிநேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை வந்த சுற்றுப்பயணிகளின் கருத்துக்களின் அடிப்படையில் அவர்களின் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு கூடுதல் ஏற்பாடாக பாராசெய்லிங் மற்றும் காற்றாடி திருவிழா அமைக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக வந்து செல்லும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

கொடைக்கானல் பகுதியில் சுற்றுலா இடங்களுக்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு பல்வேறு சுற்றுலா திட்டப்பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. சுற்றுலாத்துறை சார்பில் கோடைவிழாவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் உள்ளுர் மற்றும் வெளியூர் கலைஞர்கள் மூலம் பாரம்பரிய மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள் தினந்தோறும் நடைபெறவுள்ளது. விழாவில், தினமும் பல்வேறு பாரம்பரிய மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீர விளையாட்டுகள், படகு அலங்கார அணிவகுப்பு, நாய்கள் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., மாவட்ட வன அலுவலர் திரு.யோகேஸ்குமார் மீனா, இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு.ம.திருநாவுக்கரசு, கொடைக்கானல் நகராட்சித் தலைவர் திரு.பா.செல்லத்துரை, துணைத்தலைவர் திரு.கே.பி.மாயக்கண்ணன், கொடைக்கானல் சுற்றுலா அலுவலர் திரு.ஹ.கோவிந்தராஜ், கொடைக்கானல் தோட்டக்கலை துணை இயக்குநர் திரு.எ.நடராஜன், கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் திரு.ப.சத்தியநாதன், நகர்மன்ற உறுப்பினர் திரு.தே.இருதயராஜா, கொடைக்கானல் வட்டாட்சியர் திரு.சு.பாபு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.