Close

Kodaikanal E-Pass

Publish Date : 03/07/2025

செ.வெ.எண்:- 04/2025

நாள்:-02.07.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வருகைபுரியும் அனைத்து வாகனங்களும் ‘epass.tnega.org” என்ற இணையதளத்தில் உரிய விவரங்களை உள்ளீடு செய்து இ.பாஸ் பெற்று பயணிக்கும் முறை 07.05.2024 முதல் நடைமுறையில் உள்ளது.

மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, கொடைக்கானல் பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் மற்றும் விலங்குகளை பாதுகாக்கும் வகையிலும் சுற்றுலா பயணிகளின் வாகன போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் பொருட்டும், வாரநாட்களில் 4000 வாகனங்களும் வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களும் கொடைக்கானலுக்கு E-Pass பெற்று அனுமதிக்கும் நடைமுறை மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. அரசு பேருந்துகள், உள்ளூர் வாகனங்கள், விவசாயப் பொருட்கள் மற்றும் சரக்குப் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற ஏற்கனவே விலக்களிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்கள், 5 லிட்டருக்கு குறைவாக உள்ள தண்ணீர் பாட்டில்கள் மற்றும் அனைத்து வகையான குளிர்பான பாட்டில்கள் தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 5 லிட்டருக்க குறைவாக உள்ள தண்ணீர் பாட்டில்கள் மற்றும் அனைத்து வகையான குளிர்பான பாட்டில்கள் வைத்திருந்தால் பாட்டில் ஒன்றுக்கு ரூ.20 வீதம் பசுமை வரி விதிக்கப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.