Kodaikanal E-Pass
செ.வெ.எண்:-16/2020
நாள்:17.09.2020
திண்டுக்கல் மாவட்டம்
பொது போக்குவரத்தில் கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு இ-பாஸ் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பிற போக்குவரத்துகளில் பயணம் மேற்கொள்பவர்கள் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப.,அவர்கள் தகவல்.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திலும், பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளித்துள்ளார்கள்.
அந்த வகையில் தற்போது, தமிழ்நாட்டில், மாவட்டத்திற்குள்ளான பொது பேருந்து போக்குவரத்து, அனைத்து வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் தரிசனம், வணிக வளாகங்கள், தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, இந்த ஊரடங்கு உத்தரவானது ஒரு சில கட்டுப்பாடுகளுடன் 30.9.2020 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
07.09.2020 முதல் தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கிடையேயும் அரசு மற்றும் தனியார் பொது பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கொடைக்கானல் உள்ளிட்ட அனைத்து மலைவாசஸ்தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்லுவதை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதியுடன் இ-பாஸ் பெற்று செல்ல அனுமதிக்கப்படுவர் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சுற்றுலா தலத்திற்கு வந்து செல்ல சுற்றுலாப் பயணிகள் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு (STANDARD OPERATING PROCEDURE) அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் தற்பொழுது தமிழ்நாடு அரசு பேருந்துகள் மூலம் கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு இ-பாஸ் தேவையில்லை. ஆனால் பிற தனியார் வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும்.
கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு 01.09.2020 முதல் இதுவரை 8,600 இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு, பல்வேறு தளர்வுகளை அறிவித்தாலும், பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முககவசம் அணிவது, வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவது, வெளியிடங்களில் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிப்பது உள்ளிட்ட அரசு அறிவித்த பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றினால், இந்த நோய்த் தொற்று பரவாமல் தடுக்க முடியும். இ-பாஸ் இல்லாமல் பிற தனியார் வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப்பயணிகளுக்கு கொடைக்கானலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படாது.
கொடைக்கானலில் வசிக்கும் உள்ளுர் பொதுமக்கள் தங்களுடைய ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை போன்ற அரசு அளித்துள்ள அடையாள அட்டைகளை காண்பித்து செல்லலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்.