Close

Kodaikanal festival – 2023 Meeting

Publish Date : 23/05/2023
.

செ.வெ.எண்:-36/2023

நாள்:-22.05.2023

திண்டுக்கல் மாவட்டம், “கொடைக்கானல் கோடைவிழா-2023“ முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(22.05.2023) கொடைக்கானல் கோடைவிழா-2023 முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடைவிழா-2023 மற்றும் 60-வது மலர்க்கண்காட்சி ஆகியவை மே 26-ஆம் தேதி தொடங்கி ஜுன் 2-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மலர்க்கண்காட்சி மே 26-ம் தேதி முதல் மே 28-ம் தேதி வரை 3 நாட்களும், கோடைவிழா கலைநிகழ்ச்சிகள் மே 26-ம் தேதி முதல் ஜுன் 2-ம் தேதி வரை 8 நாட்களும் நடைபெறவுள்ளன. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் இவ்விழாவில் தோட்டக்கலைத்துறை மூலமாக மலர்க்கண்காட்சியும், சுற்றுலாத்துறை மூலமாக கோடைவிழாவும் நடத்தப்படவுள்ளது. இவ்விழாவில் பல்வேறு பாரம்பரிய மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீர விளையாட்டுகள், படகு அலங்கார அணிவகுப்பு, மீன் பிடித்தல் போட்டி. நாய்கள் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

மலர்க்கண்காட்சியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சிறப்பான ஏற்பாடுகளை செய்திட வேண்டும். கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் சிறப்பாக நடத்த வேண்டும். காவல் துறையினர் போதிய பாதுகாப்பு ஏற்படுகளை மேற்கொள்ள வேண்டும். விழா நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், அதற்கான வழிமுறைகளை வகுத்து, முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள வேண்டும். சுற்றுலாப் பயணிகள் சிரமப்படாத வகையில் கொடைக்கானல் நகராட்சி சார்பில் குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பறை வசதிகள் ஏற்படுத்திட வேண்டும். சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருவார்கள் என்பதால் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். மருத்துவக் குழுக்கள், 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருத்தல் வேண்டும். அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து அனைத்துப் பணிகளையும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.இரா.அமர்நாத், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திரு.ஜெ.பெருமாள்சாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.சீனிவாசன், சுற்றுலா அலுவலர்(பொ) திருமதி த.சுதா, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.ரெங்கராஜன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.