Close

Kodaikannal Festival meeting

Publish Date : 23/05/2022
.

செ.வெ.எண்:-33/2022

நாள்: 19.05.2022

திண்டுக்கல் மாவட்டம்

கொடைக்கானலில் கோடைவிழா-2022 முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடைவிழா-2022 முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கொடைக்கானல் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் இன்று(19.05.2022) நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடைவிழா-2022 மற்றும் 59-வது மலர்க்கண்காட்சி ஆகியவை 24.05.2022-ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் இவ்விழாவில் வரும் 24.05.2022 முதல் 29.05.2022 வரை 6 நாட்கள் தோட்டக்கலைத்துறை மூலமாக மலர்க்கண்காட்சியும், 24.05.2022 முதல் 02.06.2022 வரை 10 நாட்கள் சுற்றுலாத்துறை மூலமாக கோடைவிழாவும் நடத்தப்படவுள்ளது. இவ்விழாவில் 10 நாட்களும் பல்வேறு பாரம்பரிய மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீர விளையாட்டுகள், படகு அலங்கார அணிவகுப்பு, மீன் பிடித்தல் போட்டி. நாய்கள் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் சிறப்பாக இருக்கும்படி அதிக கவனம் செலுத்த வேண்டும். போட்டிகள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். விழா நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், அதற்கான வழிமுறைகளை வகுத்து, முன்னேற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த தேவையான மீட்பு வாகனங்களை கூடுதலாக வரவழைத்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஊத்து பகுதியில் தற்காலிகமாக ஒரு புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் பழுது ஏற்பட்டால் அதை சீரமைக்க மொபைல் மெக்கானிக் குழுக்களை தயார் நிலையில் அமைத்து, சுற்றுலாப் பயணிகள் சிரமப்படாத வகையில் வசதிகள் ஏற்படுத்த வேண்டும். மருத்துவக் குழுக்கள், 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழா சிறப்பான முறையில் நடைபெற அரசு சார்பில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும். பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக பிரையண்ட் பூங்காவில் மலர்க்கண்காட்சி நடைபெறவுள்ள இடம், அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள இடம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள விழா மேடை பகுதிகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர்.சீனிவாசன், மாவட்ட வன அலுவலர்(கொடைக்கானல்) திரு.ப.கொ.திலீப் இ.வ.ப., கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் முனைவர் ச.முருகேசன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திரு.த.பாண்டியராஜன், கொடைக்கானல் சுற்றுலா அலுவலர்(பொ) திரு.ந.சிவராஜ், கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் திரு.நாராயணன், உள்ளூர் திட்டக்குழுமம் துணை இயக்குநர் திரு.ரமேஷ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.