Close

Mahalir Loan

Publish Date : 09/02/2024
.

செ.வெ.எண்:-20/2024

நாள்:-08.02.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் 657 சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 56.87 கோடி வங்கி கடன் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், எஸ்.எஸ்.எம் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் 657 சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 56.87 கோடி வங்கி கடன் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை இன்று(08.02.2024) வழங்கினார்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு வாழ்வாதாரத்தினை ஏற்படுத்திக் கொடுத்திடவும், நிரந்தர வருவாயினை உருவாக்கிடும் பொருட்டும் பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள்.

பெண்களை மகளிர் சுய உதவிக் குழுவில் இணைத்து அவர்களின் தனித் திறன்களை மேம்படுத்துவதற்காக தனித்திறன் தொழிற்பயிற்சி அளித்து சுயதொழில் துவங்குவதற்கு தேவையான முதலீட்டுக்கு வங்கிக் கடன் உதவிகளையும் வழங்கி வருமானத்தை ஈட்டுவதற்கான வழிவகைகளை தமிழக அரசு ஏற்படுத்தி தந்து வருகிறது.

மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு தனித்திறன் பயிற்சி வழங்குவதோடு அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்வதற்காக கல்லூரி சந்தை, மாவட்ட அளவிலான விற்பனை பொருட்காட்சி, மேலும், அதில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு மாநில மற்றும் தேசிய அளவிலான கண்காட்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்தித் தருகிறது. இதன் வாயிலாக நிரந்தர வருவாய் ஈட்டும் திறன் ஏற்படுவதோடு கிராமப்புற மக்களின் தனிமனித வருவாய் உயர்வதற்கான வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழ்மை நிலையில் உள்ள பெண்களின் வாழ்வாதாரம் மேம்பாட்டிற்காக தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் மூலம் 14 ஊராட்சி ஒன்றியம், மாநகராட்சி, மூன்று நகராட்சி, 23 பேரூராட்சியில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு வங்கிக் கடன் உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் வங்கிக் கடன் இணைப்பாக கடந்த 2021-22 ஆம் நிதி ஆண்டில் 18,876 மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு 992.20 கோடி ரூபாயும், 2022-23 நிதியாண்டில் 14,479 மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு 828.60 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய 2023-24 ஆம் ஆண்டிற்கு 921 கோடி ரூபாய் வழங்கிட இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டு தற்போது வரை 11,033 மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு 708.57 கோடி ரூபாய் வங்கி கடன் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி இன்று நடைபெறும் விழாவில் 657 சுய உதவி குழுவினர்களுக்கு 56.87 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. வங்கி கடன் உதவி பெறும் மகளிர்கள் இதனை சரியான வகையில் பயன்படுத்தி உங்களது தொழிலினை மேம்படுத்தி நிரந்தர வருவாயை பெற்றிட வேண்டும்.

அதன் மூலம் கிடைக்கும் வருவாயினை கொண்டு வங்கி கடனை மீண்டும் திருப்பி செலுத்தும் பட்சத்தில் உங்களது தொழில் வளர்ச்சிக்கு தேவையான வங்கி கடன் எளிதில் கிடைக்க சிறந்த வழி ஏற்படும். ஆகையால் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தினை பயன்படுத்தி உங்களது வாழ்வினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் திரு.மு.பாஸ்கரன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.நா.சரவணன், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள் திரு.ப.க.சிவகுருசாமி, திருமதி சௌடீஸ்வரி, உதவி திட்ட அலுவலர்கள் திரு.முருகேசன், திருமதி ஜீவரம்யா, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருமதி சுபலட்சுமி, சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.