Close

Manjappai Awards 2024 – 2025

Publish Date : 25/02/2025

செ.வெ.எண்:-73/2025

நாள்:-24.02.2025

திண்டுக்கல் மாவட்டம்

மஞ்சப்பை விருது பெற பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

“மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர், 2022-23 நிதியாண்டிற்கான மஞ்சப்பை விருதுகளை சட்டமன்றக் கூட்டத்தில் அறிவித்தார்.

ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் (SUP) கை பைகள் மற்றும் பிற தடை செய்யப்பட்ட ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து, மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண்டும் உயிர்ப்பித்து, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படும். முதல் பரிசாக ரூ.10 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சம் பரிசு வழங்கப்படும்.

இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் (TNPCB), ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாகப் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும், தங்கள் வளாகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மூலம் தடையை அமல்படுத்துவதற்கும், வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றுவதற்கும் முன்மாதிரியான பங்களிப்பைச் செய்த பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இதற்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளம் (https://dindigul.nic.in/) மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளம் வாயிலாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களின் அனைத்து இணைப்புகளிலும் தனிநபர், அமைப்புத் தலைவர் முறையாக கையொப்பமிட்டு, விண்ணப்பங்களின் மென் நகலுடன், இரண்டு அச்சுப் பிரதிகள்(கடின நகல்) ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் 01.05.2025 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்விருதுக்கு விண்ணப்பிக்க கூடுதல் விபரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை 8056042304 என்ற கைப்பேசி எண் வாயிலாக தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.