Close

Miyawaki Tree Plantation

Publish Date : 23/08/2021
.

செ.வெ.எண்:-39/2021

நாள்:-19.08.2021

மியாவகி முறையில் அடர் வனக்காடுகள் அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன். இ.ஆ.ப அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம், இ.சித்தூர் மற்றும் குளத்தூர் ஆகிய பகுதிகளில் இன்று(19.08.2021) மியாவகி முறையில் அடர் வனகாடுகள் அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன். இ.ஆ.ப அவர்கள் துவக்கி வைத்து தெரிவித்ததாவது

தமிழகத்தின் பசுமை வெளிப்பரப்பை அதிகரிக்க மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் ஐந்து லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்திட அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு முயற்சியாக மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் மியாவாகி முறையில் அடர்வன குறுங்காடுகள் அமைக்கப்பெற்று வருகின்றன. முதல் கட்டமாக வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம் இ.சித்தூர் கிராம ஊராட்சி மலைக்குளத்திற்கு அருகிலும், வடமதுரை ஊராட்சி ஒன்றியம் குளத்தூர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஊரணி அருகிலும் மியாவகி முறையில் அடர் வனக்காடுகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம் இ.சித்தூர் கிராம ஊராட்சி மலைக்குளத்தில் 2152 சதுர அடியில் 432 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. வேம்பு, மலைவேம்பு, குமிழ், தேக்கு, மகாகனி, மருதம், நீர்மருதை, நாவல், பூவரசு, புங்கை, விளாமரம், வில்வமரம், எலுமிச்சை, நெல்லி, சவுக்கு போன்ற பலவகை மரங்கள் நடப்பட்டுள்ளன. இக்குறுங்காட்டுக்கு கம்பிவேலியும் தண்ணீர் வசதியும் ஏற்படுத்தபட்டுள்ளன.

வடமதுரை ஊராட்சி ஒன்றியம் குளத்தூர் ஊராட்சியில் கிராம ஊராட்சியில் 2025 சதுர அடியில் 401 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. வேம்பு, மலைவேம்பு, குமிழ், தேக்கு, மகாகனி, மருதம், நீர்மருதை, நாவல், பூவரசு, புங்கை, விளாமரம், வில்வமரம், எலுமிச்சை, நெல்லி, சவுக்கு போன்ற பலவகை மரங்கள் நடப்பட்டுள்ளன. இக்குறுங்காட்டுக்கு கிலுவைமரங்களைக் கொண்டு உயிர்வேலியும் தண்ணீர் வசதியும் ஏற்படுத்தபட்டுள்ளன.

மியாவாகி முறையில் மரங்களை நடும் இடத்தை முதலில் மூன்று அடிக்கு குழி எடுக்கப்பட்டு அவற்றில் பல அடுக்குகளாக மக்கும் குப்பைகள், ஆட்டுசாணம், மாட்டுசாணம் போன்றவை இடப்பட்டு, நிலம் பக்குவப்படுத்தப்பட்டு மரங்கள் நடப்படுகின்றன. மரங்களை இம்முறையில் நடுவதனால் குறுகிய காலத்திலியே சிறப்பான வளர்ச்சி பெறும். திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்கட்டமாக அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் முப்பது குறுங்காடுகள் வரும் இரு வாரங்களிலும், நூறு குறுங்காடுகள் செப்டம்பர் மாத இறுதிக்குள்ளும், ஆயிரம் குறுங்காடுகள் ஒரு வருட காலத்திலும் நடப்பட உள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன். இ.ஆ.ப அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர், கூடுதல் ஆட்சியர் திரு.ச.தினேஷ் குமார்,இ.ஆ.ப., மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.