Close

MLA-Private Employment Camp

Publish Date : 29/11/2021
.

.

செ.வெ.எண்:-75/2021

நாள்:28.11.2021

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 2,219 நபர்களுக்கு பணி நியமன ஆணை – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில் வழங்கினார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்), மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டு மையம் ஆகியவை சார்பில் மாபெரும் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம், திண்டுக்கல் எம்.வி.எம். அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் இன்று(28.11.2021) நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில், வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு மகளில் நல மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திண்டுக்கல் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கண்டறியப்பட்ட ஏழை மற்றும் மிகவும் ஏழை குடும்பங்களைச் சார்ந்த பெண்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு வாழ்வாதார முன்னேற்றத்திற்கான உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெண்களை மகளிர் சுய உதவிக்குழுவில் இணைத்து, அவர்களின் ஆற்றலை மேம்படுத்துவதோடு, வாழ்வாதார மேம்பாட்டிற்கான கடன் உதவிகளையும் பெற்றுக்கொடுத்து வருமானத்தை ஈட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சுமார் 2 இலட்சம் பதிவுதாரர்கள் வேலைவாய்ப்புக்காக தங்களது பெயரை பதிவு செய்துள்ளார்கள். இவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக மட்டுமே அவர்கள் தகுதிக்கேற்ப அரசுப்பணி வழங்குவது என்பது இயலாததாகும். எனவே, மாநில மற்றும் மத்திய அரசால் நடத்தப்படும் வேலைவாய்ப்புக்கான பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பதிவுதாரர்களை தயார் செய்து, அவர்களை நிரந்தர அரசு வேலையில் பணி அமர்த்த வேண்டி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் ஏற்படுத்தப்பட்டு, இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகளும், மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.

எனவே, எல்லா வகையான கல்வித்தகுதியுடைய வேலை நாடுநர்களும் பயன்பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சிறிய அளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவிலான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்), மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டு மையம் ஆகியவை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற வேலைவாய்ப்பு மேளாவில், 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள் மற்றும் பட்டயப்படிப்புஇ பட்டப்படிப்புஇ ஐ.டி.ஐஇ பொறியியல் படிப்பு படித்தவர்கள் என 6,122 நபர்கள் கலந்து கொண்டார்கள். தனியார் துறை சார்ந்த சேவை மற்றும் தொழில் நிறுவனங்கள், டெக்ஸ்டைல்ஸ், ரெடிமேட் கார்மெண்ட்ஸ், மோட்டார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனி மற்றும் கட்டுமானத்துறை சார்ந்த நிறுவனம் போன்ற 148 வேலைவாய்ப்பு தொழில் நிறுவனங்கள், 11 திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டன.

இந்த முகாம் மூலமாக 2,219 நபர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட தகுதியான இளைஞர்களுக்கு, அவரவர் தகுதிக்கேற்ப தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த முகாம் வேலை நாடுநர்களுக்கும், வேலையளிப்பவர்களுக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

இந்த முகாமில், மாவட்ட தொழில் மையம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அரசினர் தொழில் பயிற்சி நிலையம், மகளிர் திட்ட அலுவலகம் மற்றும் பல்வேறு திறன் பயிற்சி அளிப்பவர்கள் சார்பாக அரங்குகள் அமைக்கப்பட்டு, அரங்குகளில் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள், உதவித்தொகைகள், கடனுதவிகள், சுயதொழில் குறித்த ஆலோசனைகள் பெற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில், 20 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.76,500 மதிப்பில், மொத்தம் ரூ.15.30 இலட்சம் மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சிகளில், திண்டுக்கல் மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலர் திரு.நா.சரவணன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநர் திரு.ச.பிரபாவதி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.ம.காசிசெல்வி, துணை ஆட்சியர்(பயிற்சி) திரு.இரா.இரா.விஸ்வநாதன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திரு.சு.காமேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி மு.ஜெயசீலி, திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.ரமேஸ்பாபு, திண்டுக்கல் எம்.வி.எம். அரசினர் மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் தே.லட்சுமி உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்