Monday Grievance Day Petition

செ.வெ.எண்:-02/2022
நாள்:02.05.2022
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும்,பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படுகிறது.இன்றைய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 227 மனுக்கள் பெறப்பட்டன.பொதுமக்களிடமிருந்து மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பெற்றுக்கொண்டார். மேலும், பெறப்பட்ட மனுக்களில், தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி ஃகல்லூரி மாணவ, மாணவியர்களின் தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட அளவில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளின் “கலைத்திருவிழா” நடத்தப்பட்டது. போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 74 மாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசு ரூ.500, இரண்டாம் பரிசு ரூ.300 மற்றும் மூன்றாம் பரிசு ரூ.200-க்கான ரொக்க பரிசுகளையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 2021-22-ம் ஆண்டு தரிசு நிலத்தில் தோட்டக்கலை பயிர்களை சிறப்பாக சாகுபடி செய்த விவசாயி திரு.இக்னேசியஸ் ஜெயக்குமார் (டிராகன் புரூட் நாவல்) முதல் பரிசு தொகை ரூ.15 ஆயிரமும்,திரு.பழனிச்சாமி (முந்திரி) இரண்டாம் பரிசு ரூ.10 ஆயிரமும், திரு.அசோகன் (கொடுக்காபுளி) மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரத்திற்கான பரிசுதொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் கொடி நாள் நிதி வசூலில் குறியீட்டு தொகையினை அமைந்தமைக்கான சான்றிதழ்கள் 40 அரசுதுறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப.,அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.இரா.அமர்நாத், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.எல்.ராஜசேகர், உதவி இயக்குநர்(நஃபொ) முன்னாள் படைவீரர் நலன் அலுவலர் திருமதி.ச.சுகுணா, தோட்டக்கலை துணை இயக்குநர் திரு.ஜோ.பெருமாள்சாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.ஜெயசீலி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திருமதி.இ.விஜயா உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.